ஈ.பி.டி.பி பெறும் வெற்றி தமிழ் மக்களின் நிரந்தரமான வெற்றி – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Tuesday, September 24th, 2019


வாக்குறுதிகளை வழங்கி ஆரசியல் கட்சிகளும் அதனை முன்னிறுத்திய தரப்பினரும் வெற்றிகண்டு கொள்வதால் வாக்களித்த சிறுபான்மை இன மக்கள் தமது எதிர்பார்ப்புக்கள் எதுவும் கிடையாத நிலையில் தொடர் தோல்விகளையே இதுவரை கண்டுள்ளனர். ஆனால் நாம் எம்மை வெல்ல வையுங்கள் மக்களை வெல்ல வைக்கின்றோம் என்றே மக்களிடம் கோரிவருகின்றோம். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

சுயநல அரசியலுக்காகவோ அன்றி எமது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ நாம் யாரையும் விமர்சனம் செய்வது கிடையாது. மாறாக நடைமுறை சாத்தியமற்ற வகையில் மக்களை உசுப்பேற்றி கிடைப்பவற்றையும் கிடையாது செய்யும் சுயநலத் தரப்பினரையே நாம் விமர்சனம் செய்து வருகின்றோம்.

நாம் எந்த சந்தர்ப்பத்திலும் யார்மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு செயற்பட்டதும் கிடையாது. மக்களை தவறாக வழிநடத்தி அதன்மூலம் எமக்கான தேவைகளை பூர்த்தி செய்ய முற்பட்டதும் கிடையாது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் சரி தமிழ் தேசிய முன்னணியினரும் சரி தமிழ் மக்களை தொடர்ந்தும் தவறாகவே வழிநடத்த முற்படுகின்றனர்.

இவர்களது இந்த பணப் பெட்டி அரசியலும் பிணப் பெட்டி அரசியலும் எமது மக்களை மேலும் அழிவுகளுக்குள்ளேயே தள்ளும் வகையில் காணப்படுகின்றது. ஆனாலும் தமிழ் மக்கள் இவர்களது இந்த போலித்தனங்களை இன்று இனங்கண்டு கொண்டுள்ளனர்.

இனிவருங் காலத்தில் இவ்வாறானவர்களின் சுயநல அரசியலை மக்கள் தூக்கி எறிந்து யதார்த்தமான வகையில் சிந்தித்து மக்களுக்காக சேவை செய்பவர்களை இனங்கண்டு கொள்வார்கள் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெறுவதென்பது தமிழ் மக்கள் பெறும் வெற்றியாகவே அமையும். எமது கட்சியின் வெற்றியில் எமது மக்களே அதிகம் பயன்களை பெற்றுகொள்வார்கள். இதற்கு கடந்தகால வரலாறுகள் சாட்சியாக உள்ளன.

அந்த வகையில்தான் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்நிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதரிப்பதற்கு முடிவு செய்துள்ளோம்.

நாம் எங்களை நம்புங்கள் என்றுதான் எமது மக்களிடம் கூறிவருகின்றோம். ஒருபோதும் அரசுகளை நம்புங்கள் என்று கூறியது கிடையாது. நாம் கூறும் வாக்குறுதிகளுக்கு நாம் தான் பொறுப்பானவர்களாக இருப்போம். வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அரசு செய்யவில்லை என அடுத்தவர் மீது பழிசுத்திவிட்டு இருக்கப்போவதும் இல்லை. எம்மிடம் எமக்கு அதிக நம்பிக்கை உண்டு. அதுபோல அதனை பெற்றுத்தரவதற்கான வழிமுறையும் பொறிமுறையும் எம்மிடம் உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் ...
மலேரியாவை ஏற்படுத்தும் நுளம்புகள் வடக்கில் மட்டும் பரவியது எப்படி? நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி க...
மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா – தமிழ் மக்களின் தோல்வி காணாத ஏக தலைவரின் பதவியேற்...

வடக்கு மாகாணத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் நிதியை வெளிப்படை...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி - 52 தொழில் முனைவோருக்கு தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீ...