இனங்களின் ஐக்கியத்திற்காக பாடுபட்டவர் அமரர் சாலிந்த திசாநாயக்க – டக்ளஸ் எம்.பி புகழாரம்!

Friday, August 23rd, 2019

1994ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி இறக்கும் வரையில் தொடர்ந்து 25 வருடங்களாக குருனாகலை மாவட்டத்திலே ஹிரியால தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்த அமரர் சாலிந்த திசாநாயக்க அவர்கள், அதே முhவட்டத்தின் பொல்பித்திகம என்கின்ற அழகிய கிராமத்திலே 1958ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி பிறந்தவர்.

குருனாகலை, மலியதேவ வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியைக் கற்ற அவர், பின்னர் கண்டி கிங்ஸ்வுட் வித்தியாலயத்தியத்தில் கல்வியைத் தொடர்ந்து, உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் சித்தி எய்து, மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இணைந்தவர்.

வரலாற்றில் முதற் தடவையாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தினுள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய மாணவர் அமைப்பினை உருவாக்கி, அதன் தலைமைத்துவத்தை ஏற்றிருந்த பெருமை அவரைச் சார்கின்றது.

பின்னர் அக்கட்சியிலே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக அக்கட்சியிலிருந்து பிரிந்து அமரர் விஜய குமாரணதுங்க – சந்திரிக்கா அம்மையாருடன் இணைந்து ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியை ஆரம்பிப்பதில் பெரிதும் துணை நின்றவர்.

1988 – 1989 காலகட்டங்களிலே விஜய குமாரணதுங்க அவர்களின் மறைவுக்குப் பின்னர், சந்திரிக்கா அம்மையாரின் பாதுகாப்பு சார்ந்த கடமைகளிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

அக்காலகட்டத்தில் வடக்கிலே – குறிப்பாக வவுனியாவிலே அவர் தலைமையிலான குழுவினர், மறைந்த தோழர் உமா மகேஸ்வரன் அவர்களது முகாமிலே ஆயுதப் பயிற்சியும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரசாயன பொறியியலாளரான சாலிந்த திசாநாயக்க அவர்கள், ஆயுதங்களைக் கையாளக் கூடிய திறமையினையும் கொண்டிருந்தவர்.

அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் ஊடாக தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த அவர், கட்சிக்குள் ஏற்பட்டிருந்த விரக்தி நிலைமைகள் காரணமாக அப்போதைய பிரதமராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன் இணைந்ததான புதியதொரு அரசியல் பயணத்தை  இறுதிவரையில்  அவர் தொடர்ந்திருந்தார்.

இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வலியுறுத்துகின்ற வகையில் தனது பொது வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் ஒழுங்குற அமைத்துக் கொண்ட அன்னார், இலங்கையின் முதலாவது மாகாண சபைத் தேர்தலின்போது குருனாகலை மாவட்டத்தில் ஐக்கிய சோசலிச முன்னணி சார்பில் போட்டியிட்டு, அமோகமான வெற்றியைப் பெற்றவர்.

1994ஆம் அண்டில் நாடாளுமன்ற பிரவேசம் கண்ட அவர், காணி அபிவிருத்தி, சிறுபயிர் ஏற்றுமதி அமைச்சராக, ரஜரட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சராக, தெங்கு அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக, பெருந்தோட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சராக, தேசிய வைத்திய அமைச்சராக என பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளை எற்று திறமையாக செயற்பட்டவர்.

இவர் தேசிய வைத்திய அமைச்சராக செயற்பட்டிருந்த நிலையில், இந்த நாட்டில் தேசிய வைத்தியத்துறைக்கு மிகச் சிறந்த சேவையினை வழங்கியாதாக இன்றும் பேசப்பட்டு வருபவர்.

இயற்கை விவசாயத்தில் மிகுந்த அக்கறை கொண்ட மிகச் சிறந்த விவாசாயியான சாலிந்த திசாநாயக்க அவர்கள், ஒரு வயலிலிருந்து அதிகூடிய அறுவடையினைப் பெற்றவர்களுள் உலகிலேயே மூன்றாவது நபராக கணிக்கப்பெற்றவர்.

பல்வேறு திறமைகளைக் கொண்ட அன்னாரை நினைவு கூறுகின்ற இந்நாளில், அவரது மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கட்சி தோழர்கள் அனைவருடனும் எனது கட்சி சார்பாகவும், எமது மக்கள் சார்பாகவும் எனது அனுதாபங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

(இன்றைய தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சாலிந்த திசாநாயக்க அவர்கள் தொடர்பிலான அனுதாபப் பிரேரணை குறித்து எனது கருத்துகளை பதிவு செய்யும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.)

Related posts: