“ஹேவிளம்பி” வருடத்திலாவது எங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் – புத்தாண்டு செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, April 13th, 2017

காணாமல்ப்போன தம் உறவுகளைத் தேடி காயாத கண்ணீருடன் எமது மக்கள் கதறி அழுதபடி நியாயம் கேட்டுப் போராடுகின்றனர். சொந்த நிலத்தை மீண்டும் எங்களிடமே தாருங்கள் என்றும் படித்துப் பட்டமும் பெற்றோம் உழைத்துச் சாப்பிட எங்களுக்கு வேலை தாரீர் என்றும் எங்கள் இளைஞர்களும் யுவதிகளுமாக என் தேச மக்;கள் தெருக்களில் இருக்கின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தீர்வேதும் இன்றி சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்றனர். காலங்காலமாக எதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும் நடத்தி எல்லா நாளும் தமது குடும்பத்துடன் கொண்டாட்டம் நடத்தும் தமிழ் மக்களின் அரசியல் எதிராளிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இரவு விருந்துகளில் மயங்கிக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில் பிறக்கவுள்ள “ஹேவிளம்பி” வருடம் எங்கள் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் இலக்குகளையும் மகிழ்ச்சியானதாக மாற்றித்தர வேண்டும்.

ஒவ்வொரு பண்டிகைகளின் போதும் எங்கள் மக்களின் வாழ்வில் சுபீட்சம் பிறக்கும் என்றும் ஒளிமயமான வாழ்வு மலரும் என்றும் எத்தனை தடவைகள் ஏக்கத்துடன் காத்திருந்தோம். இருந்தபோதும் நாம் எதிர்பார்த்த மாற்றமும் மலர்ச்சியும் தாயக தேசத்தில் முழுமையாக சாத்தியமாகவே இல்லை.

யுத்தமெனும் பயங்கரம் நம்மை விட்டு விலகியபோதும் நிம்மதியும் மகிழ்ச்சியும் மக்களின் மனங்களில் இன்றுவரை நிரந்தரமாகவில்லை. ஒற்றை அமைச்சராய் அதிகாரம் இருந்தபோது ஆயிரமாயிரம் முயற்சிகள் மேற்கொண்டு படையினர் வசமிருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை பெரும்பாடுபட்டு மீட்டெடுத்தேன். இந்தியாவிடம் வீடுகள் கேட்டு மீளக்குடியேற்றம் செய்தேன். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலிகளை பொதுவாழ்வில் இணைக்க போராடி அதில் வெற்றியும் கண்டேன். எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தேன்.

இன்னும் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். எமது மக்களுக்கு அரசியல் சமத்துவமும் நிம்மதி நிறைந்த வாழ்வும் வேண்டுமென்ற இலக்கு வெல்லப்படும் வரையில்எத்தனை தடைகள் இடையூறுகள் எதிரே வந்தபோதும் எதிர்கொண்டு போராடுவேன். மக்களை உசுப்பேற்றிவாக்குகளை அபகரித்துக் கொண்டவர்கள் தமிழர்களின் தலையெழுத்தை கிறுக்கி எழுதும் வெறுமை அரசியலை “தேசியம்” என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள். அதனால் மக்களுக்கு கிடைத்தது எதுவுமில்லை. இருந்ததையும் இழந்தவர்களாகவே எமது மக்கள் இன்று வீதிகளில் அழுது புரண்டு போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

நியாயங்களைக் கேட்கவும் நிமிர்ந்து நின்று போராடவும் தாயக மக்கள் துணிந்துவிட்டார்கள் என்ற செய்தியுடன் விடிகின்ற “ஹேவிளம்பி” வருடமாவது எமது மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையைக் கொடுக்கும் என்றும் தாயக தேசத்தில் சுபீட்சத்தை மலரச் செய்யும் என்றும் நம்புகின்றேன்.

Related posts: