வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் 9 ஏ சித்தி – அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று பாராட்டு!

Saturday, December 2nd, 2023

வெளியான பெறுபேறுகளின் அiடிப்படையில் யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பரீட்சை முடிவுகளை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிபர் இராஜினி முத்துக்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் சித்தியடைந்த மாணவிகளையும் பாராட்டுவதற்காக கல்லூரிக்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், 13 ஆயிரத்து 588 பேர் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தியினை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கு அமைய, கண்டி மஹாமாய மகளிர் கல்லூரியின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

அதேநேரம், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

அத்துடன், பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த பாடசாலை தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

இதுதவிர, கொழும்பு ரோயல் கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: