வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம் பேசும் சுயலாப அரசியல்வாதிகளின் நிலையை எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, September 11th, 2019


தமிழ் மக்களிடையே வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம் பேசும் சுயலாப தரகுபணப்பெட்டி, சவப்பெட்டி அரசியல்வாதிகளின் நிலையை எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது. இவர்களை நம்புவதற்கும் தமிழ் மக்கள் தயாராக இல்லை என்பதாலேயே எமது மக்கள் தமது பிரச்சனைகளுக்கு தீர்வை வலியுறுத்தி வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் வாக்களித்ததால் “நல்லாட்சி” என்று கூறிக்கொண்டு ஆட்சி நடத்தியவர்களும், அந்த ஆட்சிக்கு முண்டு கொடுத்து பாதுகாத்தவர்களும் அரசியலில் எதிர்க்கட்சியும் ஆட்சியில் பங்கெடுத்திருந்த நிலையில் இனி எப்போதும் சாத்தியப்படாத நல்ல சந்தர்ப்பம் வாய்த்திருந்தபோது அதைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காதவர்கள். இப்போது அடுத்த இரண்டு வருடத்தில் அரசியல் தீர்வை வழங்குகின்றோம் என்று கூறுவது வேடிக்கையானதாகும்.

அத்தகைய உள்ளடக்கமற்ற வெற்று வாக்குறுதிகளை இனியும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை. அத்தகைய பொய்யான கதைகளை கூறியாவது கூட்டாக தமிழ் மக்களை ஏமாற்ற எத்தனிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கபட நாடகத்தை நம்புவதற்கும், அவர்களை நம்பி வாக்களிப்பதற்கும் தமிழ் மக்கள் இனித் தயாராக இல்லை.

எந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு தீர்வை தட்டில் வைத்துத் தந்துவிடுவார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசுகளால் மறுக்கமுடியாததும், இலங்கையின் அனைத்து இன மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அவர்களால் முழுமையாக அனுபவிக்கப்படுவதுமான மாகாணசபை முறைமையெனும் அரசியல் வடிவத்தை பலப்படுத்தி, பாதுகாத்து அதை நாம் எதிர்பார்க்கும் அரசியல் இலக்கு நோக்கி நகர்த்துவதே நடைமுறைச்சாத்தியமானதாகும்.

இதையே நாம் கடந்த முப்பது ஆண்டுகளாக கூறிவருகின்றோம். இலங்கை , இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அழுல்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இவ்வாறு நாம் கூறிவருவதை விமர்சித்து எம்மைத் தூற்றியவர்களும், மாகாணசபை முறைமையை தும்புத்தடியாலும் தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று நிராகரித்தவர்களும் இப்போது நாம் கூறிவந்த வழிமுறையே சரியானது என்பதை ஏற்றுக்கொள்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இதைவிடுத்து நட்சத்திரங்களை கொண்டுவந்து பூமியில் நடுவோம் என்றும்,தனி ராஜியங்களை சிங்களவர்களிடமிருந்து பலாத்காரமாக பறித்துத் தருவோம் என்றும் வாக்குறுதியளித்து, உணர்ச்சியூட்டி தமிழ் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி தமது சுயலாப அரசியலை முன்னெடுக்க முடியும் என்று செயற்படும் போலித் தமிழ்த் தேசியம் பேசும் பணப்பெட்டி, சவப்பெட்டி அரசியல் நடத்தும் அனைவரையும் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் நிராகரிப்பார்கள் என்றே நம்புகின்றேன்.

(இரண்டு வருடகாலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான  நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் வடக்கில் கூட்டமைப்பினருக்கு சரிந்துள்ள ஆதரவை மீண்டும் கட்டயெழுப்பவே அவ்வாறு அவர் கூறியதாக நீங்கள் கருத்துக் கூறியிருந்தீர்கள். இனி வரக்கூடிய எந்தவொரு ஜனாதிபதியும்,  அல்லது அரசாங்கங்களும்  தமிழர்களுக்கான நியாயமான தீரவை வழங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளனவா? ? என தினகரன் வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது நிருபரால் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.)

Related posts: