விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட  இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016

எமது நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, எமது விவசாயத் துறையானது உரிய – எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியைப் பார்க்கும்போது விவசாயத்துறையின் பங்களிப்பானது வர வரக் குறைந்த நிலையையே அடைந்து வருவதாகத் தெரிகிறது.எனவே, இது தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்தைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை நான் இந்தச் சபையின் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

எமது நாட்டின் எதிர்கால விவசாயத் துறை சார்ந்த அபிவிருத்திக்கு நிலைபேறான ஒரு கொள்கை வகுக்கப்படாவிட்டால், எதிர்கால உணவு விடயத்தில் நாம் மிகவும் பாதிக்கப்படப் போகின்றோம் என்பதை அவதானத்தில் கொண்டு, அதற்கான அவசியத்தை உணர்ந்து கொண்டு, இந்த அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த வகையில் பார்க்கின்றபோது, எமது எதிர்கால விவசாயத்துறையைப் பாரம்பரிய தொழில் நுட்பங்களும், நவீன தொழில் நுட்பங்களும் ஒருசேர இணைக்கப்பட்ட ஒரு கலவைச் செயன்முறையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

எமது நாட்டில் விவசாயத்துறை தொடர்பில் ஒரு தேசியக் கொள்கை அவசியம் என்பதை இங்கு நான் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளேன். ஏனெனில், ஒரு தேசிய கொள்கை இல்லாத நிலையில், விவசாய மக்களும், நுகர்வோரும் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகின்றது.

குறிப்பாக, இந்த நாட்டில் நெற் பயிர்ச் செய்கை என்பது பரவலாக நாடலாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால், குறிப்பிட்ட காலங்களில் அதிகளவிலான உற்பத்திகள் சந்தைக்கு வரும் நிலையில், தங்களது உற்பத்திகளை நியாயமான விலைக்கு சந்தைப்படுத்திக் கொள்ள முடியாத நிலைக்கு விவசாய மக்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.

நெல் சந்தைப்படுத்தும் சபை இந்த அறுவடைகளை கொள்வனவு செய்யும் எனக் கூறப்பட்டாலும்கூட, பல்வேறு காரணங்களால் தங்களது அறுவடைகளை நியாயமான விலைக்கு சந்தைப்படுத்த இயலாத நிலையையே விவசாய மக்கள் அடைகின்றனர்.

இவ்வாறு பெரும்பாலானவர்கள் இந்த நெற் பயிர்ச் செய்கையில், பாரியளவில் ஈடுபடுவற்;கு அத் துறை சார்ந்து அரசினால் வழங்கப்படுகின்ற சலுகைகளும் காரணமாக இருக்கலாம்.

அதே போன்றுதான் மரக்கறி வகைகளின் பயிர்ச் செய்கை தொடர்பிலும் இந்த நிலையே தொடர்கின்றது. எனவே, இந்த நிலை மாற்றப்பட வேண்டும். எந்தெந்தக் காலகட்டங்களில் என்னென்ன பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவற்றுக்கான தேவையும், சந்தை வாய்ப்பும் இருக்கின்றதோ அது தொடர்பில் விவசாய மக்கள் உரிய வகையில் தெளிவூட்டப்பட வேண்டும். என்றும்,

மேலும், இன்றைய உலகில் கேள்விகளுக்குரிய, விலை மதிப்புமிக்க பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வுகளையும், ஊக்குவிப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே போன்று, உள்ளூர் உற்பத்திகள் சந்தைக்கு வரும் காலகட்டங்களில் அதே பொருட்கள் இறக்குமதி செய்யப்படுமானால், அவற்றின் இறக்குமதி வரிகளை அதிகரிக்க வேண்டும் என நான் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றேன்.

அதற்கேற்ற வகையில் இறக்குமதிக்கான வரிகள் அதிகரிக்கப்படுகின்ற போதிலும், அவை போதுமானதாக இல்லாத காரணத்தால் எமது விவசாய மக்கள் தொடரந்தும் பாதிக்கப்படுகின்ற நிலையிலேயே இருக்கின்றனர்.

எனவே, குறிப்பாக, உருளைக் கிழங்கு, வெங்காயம், மிளகாய், திராட்சை போன்ற உற்பத்திகள் உள்@ரில் அறுவடையாகும் காலங்களில், அப் பொருட்களின் இறக்குமதி வரியை போதுமான வரையில் அதிகரிக்குமாறும், அப் பொருட்களுக்கான இறக்குமதியை நுகர்வோரின் தேவைக்கேற்ப, உள்@ர் உற்பத்திகளின் அளவைப் பொறுத்து,  மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில். எமது மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரமாக விவசாயத் துறையே காணப்படுகின்றது. எனினும், மிகவும் வளமிக்க – செழிப்பான எமது மக்களின் விவசாய நிலங்கள் – அது சார்ந்த வளங்கள் பல இன்னமும் எமது மக்களின் பாவனைக்கு விடப்படாத நிலையே தொடருகின்றன.

குறிப்பாக, வலிகாமம் வடக்கு பகுதியில் எமது மக்களது வளமான விவசாய நிலங்கள் பல இன்னும் விடுவிக்கப்படவில்லை.

எனவே, வடக்கில் இருக்கின்ற அரச தரிசு நிலங்களை இனங்கண்டு, அவற்றில் அம் மாவட்டத்தின் சனத்தொகைக்கும், விகிதாசாரத்திற்கும் ஏற்ற வகையில், தேசிய பாதுகாப்புக்கு ஏற்ப, முப்படைகளை அமர்த்துவதற்கும், எமது மக்களின் விவசாய, கடற்றொழில் மற்றும் குடியிருப்புக் காணிகளை விரைவாக விடுவிப்பதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

யாழ் குடாநாட்டைப் பொறுத்த வரையில் புகையிலைச் செய்கை என்பது வருவாய் கூடிய ஒரு செய்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச் செய்கை காரணமாக  ஆயிரக்கணக்கான எமது மக்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது நாட்டில் புகையிலை உற்பத்திகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஏற்பாடுகள் காரணமாக புகையிலைச் செய்கையை மேற்கொள்ள இயலாததொரு நிலை ஏற்பட்டு விடுமோ என அந்த மக்கள் அஞ்சுகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இச் செய்கைக்கு மாற்றாக, இம் மக்களது வாழ்வாதாரத்திற்கு ஏற்ப மாற்றுப் பயிர்ச் செய்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும், எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கொண்டுவரப்பட்டுள்ள ‘விஷமற்ற உணவு உற்பத்தி” திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இயற்கை உர உற்பத்தி நிலையங்களை வடக்கில் அதிகளவில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், தற்போது விவசாய மக்களுக்கென வழங்கப்படுகின்ற உர மானியத்துக்கான நிதித் தொகைகள் உரிய காலகட்டத்துக்குள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வடக்கு விவசாய மக்களிடமிருந்து எழுப்பப்படுகின்றன. இந்த விடயம் நாடளாவிய ரீதியிலும் இருந்து வருகிறது.  இவ்விடயம் தொடர்பிலும் கமத்தொழில் அமைச்சர் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன்,

வடக்கில் பல்வேறு நிறுவனங்களின் உற்பத்திகள் என பல்வேறு முகவர்களால் விற்பனை செய்யப்படுகின்ற, கிருமி நாசினிகள் மற்றும் களைநாசினிகள் என்பன உரிய பயன்களை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் வடக்கு விவசாய மக்களிடமிருந்து எழுகின்றது.

குறிப்பாக, கோரை, நெற்சப்பி மொண்டி போன்ற களைகள் களைநாசினி பயன்படுத்தப்பட்ட பின்னர் மிகவும் செழிப்பாக வளர்வதாகவும், பயிர்கள் அழிந்து விடுவதாகவும், இந்த மருந்து வகைகளை விற்பனை செய்யும் முகவர்களின் அறிவுரைப்படி – அவர்களாலேயே கலந்து கொடுத்த முறையில் பயன்படுத்தியும் அதற்கான செலவினங்கள் அதிகரிக்கின்றனவே அன்றி, பயன் எதுவும் கிட்டவில்லை என்றும் இந்த விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த விடயம் குறித்தும் உரிய, உடனடி அவதானங்களைச் செலுத்துமாறு கௌரவ அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன். அதே நேரம், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் சுமார் 1300 வரையில் காணப்படுகின்றன.

அதே போன்று கமநல சேவைகள் திணைக்களத்தில் பெரும்பாக உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் சுமார் 80 வீதம் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.

குறிப்பாக, விவசாயத் துறையுடன் தொடர்பான இந்த இரண்டு திணைக்களங்களிலும் சுமார் 70 – 80 வீதமான வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், இவற்றை அந்தந்த மாவட்டங்களின் ஆளணிகளைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும் படியும், இதன் ஊடாக இந்த மாகாணங்களின் விவசாயத் துறையை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கு வழிவகுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், வடக்கில் பல்வேறு விவசாயத் துறை சார்ந்த பாதைகள், சுமார் 1500க்கும் மேற்பட்ட சிறு விவசாயக் குளங்கள் என்பன புனரமைக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளன. அவற்றையும் இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றைப் புனரமைத்துத் தருவதற்கும்,

அறுவடைக் காலங்களில் வெளி மாவட்டங்களில் இருந்தே யாழ் மாவட்ட விவசாய மக்கள் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு வர வேண்டிய நிலையில் உள்ளனர். இதன்போது பாரிய நிதியை அதன் வாடகையாகச் செலுத்த வேண்டி ஏற்படுவதால், அவர்களால் இதனைத் தாங்க இயலாத நிலை ஏற்பட்டு வருகின்றது. எனவே, இந்த நிலையைத் தவிர்க்கும் முகமாக கமநல சேவைகள் திணைக்களத்திற்கு அறுவடை இயந்திரங்களை வழங்குவதற்கும்,

சேதனப் பசளை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற பயிர்களை எற்றுமதி செய்யும் போது அதனை உறுதிப்படுத்துவது தொடர்பில் எமது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் முகமாக, அதனை உறுதிப்படுத்துவதற்கான இலகு முறைமை ஒன்றை ஏற்படுத்துவதற்கும்,

வடக்கில் கால நிலை மாற்றங்களால் ஏற்படுகின்ற பயிரழிவுகள் மற்றும் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள இயலாது போகின்ற நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவற்றுக்கான நட்ட ஈடுகளை வழங்குவதற்கும்,

வடக்கு மாகாணத்தில் போதியளவு நெற் களஞ்சிய சாலைகள், நெல் உலர்வுத் தளங்கள் மற்றும் குளிரூட்டி அறைகள் என்பவற்றை அமைப்பதற்கும்,

கைவிடப்பட்டிருக்கும் காணிகளை இனங்கண்டு, அவற்றில் பயிர்ச் செய்கையினை ஊக்குவிப்பதற்கும்,

நெற் பயிர்ச் செய்கையாளருக்குத் தற்போது வழங்கப்பட்டிருக்கும் காப்புறுதி முறைமையை ஏனைய பயிர்ச் செய்கையாளர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும்,

வடக்கில் உரிய முறையில் மண் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும்,பயன்படுத்தக்கூடிய உர வகைகள், கிருமிநாசினிகள் மற்றும் களைநாசினிகள் தொடர்பில் விவசாய மக்களுக்கு தெளிவூட்டல்களை மேற்கொள்வதற்கும்

கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றேன்.

113

Related posts:

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகம்: வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்த...
செய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவ...
தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்க வேண்டும் - ஜனாத...

வழித்தடம் 773 இலக்க தட்டிவான் சேவையை தனியார் சிற்றூர்தி சேவையாக மேற்கொள்ள அனுமதி பெற்றுத் தாருங்கள் ...
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவ...
தமிழ் மக்களிடமிருந்து அகற்றப்பட முடியாதிருப்பதே எனது அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி - அமைச்சர் டக்ளஸ்...