விலைவாசி அதிகரிப்பு: வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் படுகின்ற துயரங்கள் குறித்து கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை – டக்ளஸ் எம்.பி எடுத்துரைப்பு!

Monday, May 14th, 2018

நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கின்றபோது, நாளுக்கு நாள் எமது மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான விலைகள் அனைத்தும் அதிகரித்துக் கொண்டு வருவதையே காணக்கூடியதாகவுள்ளது.

குறிப்பாக கொழும்பு மற்றும் கொழும்பினை அண்டிய பகுதிகளில் வாழுகின்ற நடுத்தர வர்க்க மக்களாலேயே அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலாத நிலை இன்று தோன்றியிருக்கும் நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் போன்ற தூர இடங்களில் வாழுகின்ற மக்கள் படுகின்ற துயரங்கள் குறித்து கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை என்றே கூற வேண்டும்.

கொழும்பினை பொறுத்தவரையில் அத்தியாவசிய மற்றும் ஏனைய அனைத்துப் பொருட்களும் கொழும்புத் துறைமுகத்தை நோக்கியே வருவதால் அவற்றின் விலைகள் ஒரு மட்டத்தில் காணப்பட்டாலும் வடக்கு, கிழக்கு போன்ற தூர இடங்களுக்கு அப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்ற நிலையில் அவற்றின் விலைகளில் பாரிய அதிகரிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு போக்குவரத்து செலவீனங்கள் காரணமாகக் கூறப்படுகின்றன.

இந்த நிலையில், நேற்றைய தினமும் எரிபொருளின் விலையில் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலைமையானது எமது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகின்ற பாதிப்புகள் ஏராளமாகும்.

தொடர் யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து பாதிக்கப்பட்ட மக்களாகவே எமது மக்கள் இருக்கின்றனர். எமது மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துகின்ற உரிய ஏற்பாடுகள், யுத்தம் முடிவுக்கு வந்து இந்த 09 ஆண்டு காலப் பகுதியிலும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற விலைவாசிகளைப் பொறுத்துக் கொள்கின்ற நிலையில் எமது மக்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது மக்களின் இத்தகைய பொருளாதார வீழ்ச்சி நிலைமைகளைக் கருத்தில் கொண்டே நாம் இந்தியாவிலிருந்து பொருட்களை நேரடியாக யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வருவதற்காக காங்கேசன்துறை துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் சீரமைத்துப் பயன்படுத்துமாறு தொடர்ந்து கோரி வருகின்றோம்.

எனவே, வளங்கள் உண்டு. அவற்றை முறையாகப் பயன்படுத்த நீங்கள் முன்வருவீர்காளாயின், எமது மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்த முடியும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(தேசிய கணக்காய்வுச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, சிவில் விமான சேவைகள் சட்டத்தினை மறுசீரமைப்பதற்கான சட்டத் திருத்தம் தொடர்பான விவாதத்தின் பின் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்)

Related posts: