வடக்கு – கிழக்கு MP க்கள் தேர்தல் வெற்றிக்கான அரசியல் மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2023

தென் பகுதிகளைப் பொறுத்தமட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைவருமே ஆளுங்கட்சியில் இடம்பெற வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றனர். ஆனால், வடக்கு – கிழக்கில் போட்டியிடுகின்றவர்களின் மனோபாங்கு இதற்கு மாறானது.

அவர்கள் எதிர்க் கட்சியிலேயே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அவ்வாறு இருந்தால் பதவி மட்டும் சரி, மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பது அவர்களது கொள்கை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அலுவலங்கள்,  நாடாளுமன்றம், நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகம் உட்பட, ஆணைக் குழுக்களும் உள்ளடங்களாக 25 நிறுவனங்கள் தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவின் வாத விவாதங்களில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

எமது மக்களின் பிரதிநிதி என்ற வகையில், நான் ஓர் அமைச்சராக இருந்தாலும் சரி அல்லது, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி எமது மக்களின் பிரச்சினைகளைத், தேவைகளைத் தீர்த்து வைப்பதுடன், ஜனாதிபதி, பிரதமர், ஏனைய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களையும் விட்டு வைக்காமல் அவர்களையும் பின் தொடர்ந்து அவர்களால் தீர்த்து வைக்க முடிந்த எமது மக்களின்  பிரச்சினைகளை, தேவைகளைத் தீர்த்தும் வருகின்றேன்.

இதனால், அவர்கள் என்னை ஒரு கரைச்சல்காரன் எனவும் நினைக்கக்கூடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் எனது மக்கள் என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றேன்.

அந்த வகையில் எனது மக்களுக்கு உதவி செய்து வருகின்ற ஜனாதிபதி அவர்களுக்கும், பிரதமர் அவர்களுக்கும்,  அனைத்து அமைச்சர்களுக்கும், இராஜாங்க அமைச்சர்களுக்கும் எனது மக்கள் சார்பாக எனது நன்றியினை இந்தச் சந்தர்ப்பதத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: