வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் வகையில் ஊர்காவற்துறை, வேலணை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலைகள் வழங்கி வைப்பு!

மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வாழ்வாதாரத் திட்டங்களின் அடிப்படையில் நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக பாசி வளர்ப்பிற்காக வேலணை மற்றும் ஊர்காவற்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான காசோலைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வு இன்று (28.11.2021) ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது
சமுர்த்தி பயனாளர் குடும்பங்களில் 2 இலட்சம் குடும்பங்களை வலுப்படுத்தும் குறித்த திட்டத்திற்கு அமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டை வளர்ப்பிற்காக சுமார் 100 பயனாளர்களும் பாசி வளர்ப்பிற்காக 100 பயனாளர்களும் கொடுவா மீன் வளர்ப்பிற்காக 100 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், ஊர்காவற்துறை பிரதேசத்தில் 25 பயனாளர்களும் வேலணையை சேர்ந்த 10 பயனாளர்களும் தெரிவு செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக ஒரு பகுதியினருக்கு இன்று காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், கடற் பாசிகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல வருவேற்பு காணப்படுவதனால், பகுதி நேரமாக கடல்பாசி செய்கையில் ஈடுபடுவதன் மூலம் சராசரியாக வருடத்திற்கு 4 இலட்சம் ரூபாய் வருமானமாக பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்
அதனடிப்படையில் கடலட்டை வளர்ப்பிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தலா சுமார் 5 இலட்சம் வரையிலும், கொடுவா மீன் மற்றும் பாசி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முறையே 2 இலட்சத்து 50 ஆயிரம், ஒரு இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளன.
மேலும், கடல் பாசி செய்கையில் முதலீடு செய்வதற்கு தனியார் முதலீட்டாளர்களும் ஆர்வம் செலுத்துவதுடன் வேலணை மற்றும் ஊர்காவற்துறை பிரதேசத்தில் பொருத்தமான இடங்களும் பெருமளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையினால், பாசி வளர்ப்பில் ஈடுபடுவதற்கு மக்கள் ஆர்வம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
000
Related posts:
|
|