வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்; 6 ஆயிரம் ரூபாவினைப் பெறுவதற்கானது அல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, April 2nd, 2019

வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலான அலுவலகமானது தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்ற போதிலும், இந்த அலுவலகம் தொடர்பில் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டோரது உறவினர்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளத்தக்க வாய்ப்புகள் இன்னும் ஏற்படாதுள்ளமையை நாம் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றோம்.

அடுத்ததாக, வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களது உறவினர்கள் மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாவினைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த இரண்டு வருடங்களாக போராடி வரவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இந்த உறவுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்;டும் என்பதில் எமக்கு எவ்விதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை. ஆனால், அந்த இழப்பீட்டுத் தொகையானது, அவர்களது இழப்புகளை முழுமையாக ஈடுசெய்யப் போவதில்லை. என்றாலும், அவர்களது பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு, போதியளவு ஒரு தொகை இழப்பீட்டுத் தொகையாக – கௌரவமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆனால், அதற்கு முன்பதாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதில் நாம் தொடர்ந்தும் உறுதியாகவே இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் பல பகிரங்கமான காட்சிப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, பரபரப்பினை இந்த நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியிருந்தன. அதன்போது பல்வேறு தரப்பினர்மீது வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், உண்மைகள் கண்டறியப்படாவிட்டால், முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட அந்த அனைத்துத் தரப்புகளும் இதில் ஈடுபட்டிருக்கின்றன என்ற சந்தேகமே எமது மக்கள் மத்தியில் இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, உண்மைகள் கண்டறியப்பட்டால், இந்த வீணான சந்தேகங்கள் எமது மக்கள் மத்தியில் நிலவுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்பதுடன், மீளவும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுக்கவும் முடியும்

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் E.P.D.P.யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பி...
தமிழ் மக்களது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து முன்னேற்றம் காணச் செய்ய எந்தச் சவால்களைய...
கடற்றொழிலாளரை மையப்படுத்திய 'ஓடக்கரை' மாதாந்த சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...