வருந்துயரை எதிர்கொண்டு வரலாற்றின் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையை பெறுவோம் – புதுவருடப்பிறப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 12th, 2020

வருந்துயரை எதிர்கொண்டு வரலாற்றின் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையை பெறுவோம் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிறக்கும் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் –

எதுவரினும் முகங்கொள்வோம் என்ற மனவுறுதியும் பழையன கழித்தல் புதியன புகுதல் என்ற வாழ்வின் நம்பிக்கையுமே  மனிதகுலத்தின உயற்சிக்கும் மகிழ்ச்சிக்கும் வித்திடுகின்றன.

அந்த வகையில் நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்ற மனிதகுலத்தின் சமகால விருப்பங்களையே எமது மக்களும் தமது ஆழ்மன விருப்பங்களாக கொண்டுள்ளனர்.

இயற்கையின் அனர்த்தங்களும், பெருநோய்கள் தந்த பேரிடர்களும் போரின் அவலங்களும் கடந்தகாலங்களில் எமது மக்களை சூழ்ந்து நின்ற போதும், அவைகளில் இருந்து மீள் எழுச்சி கொண்ட வரலாற்றை கொண்டவர்கள் எமது மக்கள்.

இன்று பிறந்து வரும் சித்திரை புத்தாண்டின் மகிழ்வை எமது மக்கள் கொண்டாடி மகிழ்வதற்கு பெருங்கொடு நோயொன்று பலத்த சவாலாக இருந்து வரினும், இதையும் கடந்து,  சூழ்ந்து வரும் தடைகளையும் துயர்களையும் உடைத்து,. அழகார்ந்த வாழ்வில் நீடித்த நிம்மதியை எதிர்கால பொழுதுகள் ஒவொன்றும் தரும் என்ற மன வல்லமையோடு

நாம் சமகாலத்தை வென்று எதிர்காலத்தை வரவேற்போம். சமகால பேரிடர் எமை விட்டு அகலும் என்பதில் மாற்றமில்லை. அது குறித்த அச்சம் எமக்கு தேவையில்லை. ஆனாலும் நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சுத்தமும் சுகாதாரமும் எம்மை நாமே பாதுகாக்கும் வழிமுறைகளும் எமக்கு அவசியம். எமது மக்களை அச்சுறுத்தும் இன்றைய சூழல் எமை விட்டு அகன்று போனாலும் அதன் பொருளாதர தாக்கங்கள் சில காலம் எம்முடன் தொடர்ந்து வரும் என்பதை நாம் உணர வேண்டும்.

ஆகவே அதை எதிர் கொள்ள நாம் இன்றே எழுந்திருப்போம். இன்றில் இருந்தே உள்ளூர் உற்பத்தியில் நாம் இறங்க வேண்டும்.

கடல் வளங்களை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்! அவைகளை சந்தைப்படுத்த வேண்டும். நன்னீர் வளர்ப்பு திட்டங்களில் ஈடுபட வேண்டும். எமது விளை நிலங்களில் பயிர் செய்யவும், வீட்டுத்தோட்டங்களை அமைக்கவும்.. தரிசு நிலங்களில் விதை விதைக்கவும், விவசாய துறையை ஊக்குவிக்கவும் நாம் தயாராக வேண்டும்.

பனை வள தொழில் உட்பட சகல தொழிற்றுறைகளிலும் உள்ள தடைகளை இனம் கண்டு நாம் முன்னேறி செல்ல வேண்டும். சிறு கைத்தொழில் முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும். இதன் மூலம் நாம் பஞ்சம், பசி, பட்டினிகளில் இருந்தும் மீண்டெழ வேண்டும்.

எவரும் எவரிடமும் கையேந்தி நிற்காமல் தமது சொந்த கால்களிலேயே எமது மக்கள் நிற்கும்  நிலைமையை உருவாக்குவோம். வாழ்வின் மீதான நம்பிக்கை கொள்வோம், வருந்துயரை எதிர்கொண்டு வரலாற்றின் மாற்றத்தை உருவாக்கும் வல்லமையை பெறுவோம் என தெரிவித்துள்ளார்

Related posts:


மாங்குளம் நகர அபிவிருத்தியின் போது வனங்களது பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந...
கிளிநொச்சியில் கணிசமானளவு காணிகளை விடுவிக்க தீர்மானம் - அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு பலன்!
வடக்கின் கடற்றொழிலுக்கு விசேட நிதி - சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துவோம் அமைச்சர் டக்ளஸ் தெரி...