வரி விதிப்புகளும், பொருட்களின் விலையேற்றமும் மனித வளத்தை நாட்டைவிட்டு வெளியேற்றுகிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, March 19th, 2019

இந்த நாட்டைப் பொறுத்தவரையில், பயிற்றப்பட்ட தொழிலாளர் வீதம் அதிகளவில் குறைவடைந்து, தொழிலுக்கான ஆளணிகளைத் தேடுவதில் பலத்த சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையானது எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் தொழிலுக்கான படையணி மேலும் தேய்ந்து, முதியோரின் குடித் தொகையானது மேலும் அதிகரிக்கின்ற நிலையில் தற்போதைய நிலைமை இன்னமும் மோசமாகக் கூடும் என்பதை மனதில் இருத்திக் கொள்ளல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்ட விவாதத்தில் பொது தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்-

இன்று இந்த நாட்டைப் பொறுத்தமட்டில் மிக அதிகளவிலான இந்நாட்டு மனித வளமானது இந்த நாட்டைவிட்டு அகல்கின்ற நிலையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதிக ஊதியம், அதற்கொப்பான வசதியான வாழ்க்கைத் தேடல்கள், எதிர்கால சுபீட்சம் காரணமாக இன்று அதிகளவிலான பயிற்றப்பட்ட தொழில் வழங்கல்களும், மனித மூலதனமும் இந்த நாட்டைவிட்டு அகல்வதற்கு நீங்கள் கொண்டு வருகின்ற வரி விதிப்புகளும், பொருட்களின் விலையேற்றமும், குறிப்பிட்ட ஒரு சிறு தொகையினர் தவிர்ந்து ஏனையோருக்கான கீழ் மட்ட வாழ்க்கைக்கான வலிந்து உருவாக்கப்படுகின்ற கொள்கைகளும் மிக முக்கிய காரணமாகின்றன.

இன்று இந்நாட்டிலுள்ள இளம் மனிதவளமானது தமக்குரிய – தமது கல்வித் தகைமைக்கு – ஆற்றலுக்கு ஏற்ற தொழிற்துறைகளைத் தேடுவதிலும், காத்திருப்பதிலுமாக முதுமை நிலையை அடைந்து வருகின்றது. குறிப்பிட்ட வயதெல்லை தாண்டப்படுகின்றபோது, எந்தவொரு வேலைவாய்ப்புளும்; இல்லாத நிலையில், அந்த மனித வளமானது விரக்தியில் தனது வாழ்க்கை ஓட்டத்திற்கான எதையும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

பிறப்புத் தொகை என்பது இந்த நாட்டில் நிலையாக இருக்கிறது என்றாலும், இளவயது குடித்தொகையின் பரவல் தொழிற்துறைகளுக்கு அப்பால் ஒரு வெளிப்புறத்தில் தேங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், தடைப்பட்டும் உள்ளது. முதியோர் தொகை மறுபக்கத்தில் அதிகரிக்கின்றது. எனவே, தொழிற்படையினை – இருக்கின்ற தொழிற்துறைக்கேற்ப இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் – ஏன்? தற்போதும் உருவாகி வருகின்றது.

எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை உண்மையிலேயே நீங்கள் விரும்புகின்றீர்கள் எனில், புத்தாக்க கண்டுபிடிப்புகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அதேநேரம், நாட்டிலுள்ள தொழிற்படை நாட்டைவிட்டு அகலாதிருப்பதற்கு – அவர்கள் சுய விருப்பில் இங்கு தரித்திருக்கக் கூடிய வகையில் தொழில் அடிப்படையிலான உயர் முறைமையினாலான புறச் சூழல் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அத்துடன் தொழிற்துறைகள், விவசாயத்துறை, கடற்தொழிற்துறை உட்பட்ட அனைத்து தொழிலீட்டற்துறைகளிலும் நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதான நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்படல் வேடியது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் - மாணவர் போராட்ட...
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் மனிதாபிமானமே தேவைப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி...
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முன்மாதிரியாக கட்சி உறுப்பினர்கள் விளங்க வேண்டும் – வவுன...