வரலாற்றை மறைத்தால் தேசிய நல்லிணக்கம் பகற் கனவாகிவிடும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016

தமிழ் மொழிமூலம் வரலாற்றுப் பாடங்களில் இலங்கைத் தமிழ் மக்களதும் தமிழ் மன்னர்களதும் வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதற்குக் கல்வி அமைச்சர் சார்பில் பதிலளித்திருந்த கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்கள், அப்படி இல்லை எனவும் தமிழர்களது வரலாறுகள் பாடநூல்களில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் உண்மை அதுவல்ல என்ற விடயத்தை இங்கு நான் மீண்டும் முன்வைக்க விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

6 ஆம் தரம் முதற் கொண்டு 11 ஆம் தரம் வரையிலான தமிழ்மொழிமூலமான வரலாற்றுப் பாடநூல்களைப் பார்க்கின்றபொழுது இந்த உண்மையைக் கண்டுகொள்ள முடியும். கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ இராதாகிருஷ்ணன் இதனை உணர்ந்து கொள்வார் என நான் நம்புகின்றேன். அதை நிரூபிக்கின்ற வகையில் அந்த வரலாற்றுப் பாடப் புத்தகங்களையும் இங்கு நான் கொண்டு வந்திருக்கின்றேன்.

கௌரவ இராஜாங்க அமைச்சர் இது குறித்து ஓர் உயர் கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தித் தருவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அந்த வகையில் இந்த வரவு செலவுத்திட்ட விவாதங்கள் முடிவடைவதற்குள் அற்கான நேரத்தை அவர் ஒதுக்கித் தருவாராக இருந்தால் அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நான் கூறிக் கொள்கின்றேன்.

குறிப்பாக இந்த வரலாற்றுப் பாட நூல்களில் இலங்கை மன்னர்கள் எனப் பலரைப் பற்றிக் கூறப்படுகின்றபோதிலும் அவற்றில் ஒரு தமிழ் மன்னரைப் பற்றிக்கூட தனியான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை. யாழ்ப்பாண இராஜ்ஜியம் பற்றிய ஒரு சிறு குறிப்பு வேண்டாவெறுப்புடன் பிரசுரிக்கப்பட்டிருப்பதையே 7 ஆம் தரப் பாடநூலில் காணக்கூடியமாதிரி இருக்கின்றது.

இந்த நூல்களில் துட்டகைமுனு மன்னர் பற்றிப் பலமுறை குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில், எல்லாளன் மன்னர் தொடர்பில் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் குறிப்பிடப்படவில்லை என்பதை நான் இங்கு கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 10 ஆம் தரத் தமிழ்மொழிமூல வரலாற்றுப் பாடநூலில் துட்ட கைமுனு பற்றிய பகுதியில் எல்லாளன் மன்னனைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு மிகச் சிறிய குறிப்பில் “துட்டகைமுனு மன்னன் தோல்வியுற்ற தனது எதிராளியின் கல்லறைக்கு உரிய முறையில் மரியாதை செலுத்தும்படி ஆணையிட்டான். இதன்மூலம் தனது இராஜதந்திரச் செயற்பாட்டை வெளிப்படுத்தினான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த வரலாற்று நூல்களைக் கற்கின்ற எமது மாணவர்கள் மத்தியில் தங்களுக்கான வரலாறுகள் எதுவும்  இங்கு காணப்படாத நிலையில் இந்த நாடு தொடர்பில் ஒருவித அந்நிய மனப்பான்மையே ஏற்படுகின்றது.  பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடங்கள் புகட்டப்படுவதாயின் இலங்கையின் உண்மையான வரலாற்றை உள்ளபடி புகட்டவேண்டும்.  இவ்வாறு ஒரு சாராரின் வரலாற்றை மறைத்து அல்லது திரிபுபடுத்தி இன்னொரு சாராரின் வரலாற்றை மாத்திரம் புகட்டுவதனால் இந்த நாட்டின் அடித்தளத்திலிருந்து தமிழ் பேசும் மக்களிடையே தேசிய நல்லிணக்கம் ஏற்படுமென்பது பகற்கனவாகவே அமையும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

எனவே, தமிழ் மொழி மூலமான வரலாற்றுப் பாடத்திட்டங்களை வகுப்பதற்குத் தமிழ் மொழி மூலமான வரலாற்றுப் பேராசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்துங்கள்.  அந்தக் குழுவிற்குப் பூரண சுதந்திரத்தை வழங்குங்கள்.  வெறும் எழுத்துப் பிழைகளை மாத்திரம் திருத்துகின்றவர்களாகவும் மொழி பெயர்ப்பாளர்களாகவும் தமிழ் வரலாற்றுப் பேராசிரியர்களை இந்தப் பாடநூல் தயாரிப்பு விடயத்தில் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்றும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மாணவர்களிடம் நிதி வசூலிப்பதை நிறுத்துங்கள் .

அதேநேரம், பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து நிதி வசூலிக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கல்வியமைச்சர் அண்மையில்  தெரிவித்திருந்தார்.  இது நல்லதொரு விடயம்.  இன்றுகூட நாட்டில் பல பகுதிகளில் செயற்பட்டு வருகின்ற பாடசாலைகளில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு நிதி வசூலிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எனவே, இந்தச் செயற்பாடுகளை நிறுத்துவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

அதேநேரம், நாட்டில் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மாணவர்கள் பலர் குடும்பப் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாகப் பாதணிகள் கூட இன்றிய நிலையிலேயே பாடசாலை செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.  இதனால் தனிப்பட்ட சில முகநூல்கள் வழியாக மாணவர்களுக்கான பாதணிகளைச் சேகரித்து வழங்கும் நிலையும் உருவாகியுள்ளது என்ற விடயத்தையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தொடர்பாகவும் நான் எனது கருத்துக்களைப் பதிய விரும்புகின்றேன்.  தமிழ் மொழி மூலமான கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல்வேறு நிகழ்வுகளைக் கௌரவ உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்கள் நடத்திவருவதையிட்டு அவருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்தார்.

023

Related posts: