வடபகுதி முகம்கொடுக்கும் நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 25th, 2016

வடக்கினைப் பொறுத்த மட்டில் பாரிய நீர்த் தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் நான் தொடரந்து இந்தச் சபையில் பல முறை தெரிவித்திருக்கிறேன். இருப்பினும், இப்பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அல்லது மாகாண சபையுடன் கதைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில்கள் கூறப்படுகின்றனவே அன்றி, இதுவரையில் ஆக்கப்பூர்வமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை நான் மிகவும் வேதனையுடன் தெரிவித்தக் கொள்கின்றேன். என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

வடக்கில் நீருக்கான தட்டுப்பாடுகள் மிகவும் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், எதிர்காலத்தில் அதற்கொரு பாரிய வாய்ப்பாக மொரகஹகந்த பாரிய நீர்த் திட்டத்தை முன்னெடுத்துள்ள மகாவலி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சராக இருக்கின்ற மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எமது மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெவித்துக் கொள்கின்றேன்.

அதே நேரம், இந்த திட்டமானது வட மத்திய மாகாண கால்வாய் ஊடாக வடக்கு மாகாணத்தின் கனகராயன் குளத்திற்கு இணைக்கப்படுகின்ற திட்டம் தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றது என்பதை அறிய விரும்புவதுடன், கனகராயன் குள இயற்கை நீரோட்டமானது ஆணையிறவு கடல் நீரேரியுடன் கலந்து, வடமராச்சி கடல் நீரேரி ஊடாக தொணடமனாறு வழியாக தற்போது கடலில் கலப்பதாகவே உள்ள நிலையில் இந்த இயற்கை நீரோட்டத்தை சாதகமாக்கி, அதனை செப்பனிட்டு, அந்த நீரை எமது மக்களது பயன்பாட்டுக்கென வழங்குவதற்கான ஒரு திட்டத்தை மேற்கொள்ள முடியுமா என்பதையும் அறிய விரும்புகின்றேன்.

அதே நேரம், எமது தேசிய திட்டமான பாரிய மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல கட்ட திட்டங்களால் மகாவலி குடியேற்ற பகுதிகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படாத நிலையே காணப்படுகின்றது.

வடக்கில் மணலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திலாவது தமக்கான காணிகள் கிடைக்கும் என எமது மக்கள் எதிர்பார்த்திருந்தும், அதிலும் பாரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது.

அத்துடன் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளில் வாழ்ந்திருந்திருந்த நிலையில், யுத்தம் காரணமாக அம்மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களது சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு, பின்னர் அம் மக்கள் மீள்குடியேறிய நிலையில் அவர்களுக்கு வேறு இடங்களில் விவசாய செய்கைக்கு உதவாத சில காணிகளே வழங்கப்பட்டுள்ளன.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள ‘பீ’ வலது கால்வாய் திட்டமானது கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு பகுதியை உள்ளடக்கும் நிலையில், அங்குள்ள காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

எனவே, மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, தேசிய மகாவலி அபிவிருத்தித் திட்ட குடியேற்றங்களில் தமிழ், முஸ்லிம் மக்களையும் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், மல்வத்து ஓயா கீழ்ப் பகுதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வவுனியா செட்டிக்குளம் பகுதி வாழ் மக்களது குடிபரம்பல் சிதைக்கப்படாமல் அத் திட்டம் முன்னெடுக்கப்ட வேண்டும் என்றும், தற்போது காணிகள் இல்லாது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழந்து வருகின்ற வவுனியா தெற்கு, செட்டிக்குளம் பகுதிகளிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு இத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தற்போது காடழிப்பு மற்றும் மணல் அகழ்வுகள் போன்ற சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த நிலைமை கிழக்கிலும் ஏன்? நாடாளவிய ரீதியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், இது தொடர்பிலான சட்ட அமுலாக்கல்களை மேலும் இறுக்கமாக்கும்படி இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கைப் பொறுத்த வரையில், முறையற்ற மணல் விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது மணலைப் பெற்றுக் கொள்வதில் எமது மக்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதுடன், அதிக விலையேற்றங்களும் காணப்படுகின்றன. இந்த நிலையை மாற்றி இலகுவானதும், முறையானதுமான ஒரு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், தற்போது உலகில் மிகவும் அரிதான தாவர வகைகள் பலவும் அழிந்து வரும் நிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது. எமது நாடானது உலகின் உயிர்ப் பல்வகைமை கொண்ட இடங்கள் 25ல் ஒன்றாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது சிறிய நாடாக இருந்தாலும் ஆசியாவில் உயிர்ப் பல்வகைமை கொண்ட அடர்த்தியான நாடாக எமது நாடு விளங்குகின்றது எனபதில் நாம் பெருமைப்பட வேண்டும்.

எனினும், எமது நாட்டின் தாவர பல்வகைமைகளை எடுத்துக் கொண்டால், 3210 பூக்குந் தாவர வகைகளில் 27 வீதமானவை அருகி வரும் இனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. எனவே, இவ்வாறான தாவரங்களை பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளை நாங்கள் மேற்கொள்வது அவசியமாகவுள்ளது. அத்துடன், காடுகள் அழிக்கப்படுவதன் மூலமாக அகற்றப்படுகின்ற மர இனங்களுகக்கு பதிலாக, அதே இன மர வகைகள் மீள நாட்டப்படாத ஒரு நிலையும் காணப்படுகின்றது.

எனவே, நாங்கள் எமது நாட்டில் மர நடுகை திட்டங்களை மேற்கொள்கின்ற போது கூடிய வகையில் அழிக்கப்படுகின்ற, அழிந்து வருகின்ற இன மரங்களை மீள நடக்கூடிய ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதையும் இங்கு அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

அதே நேரம் கடலோரப் பகுதிகளைப் பொறுத்தமட்டில், கண்டல் காடுகளையும் நாம் பேணிப் பாதுகாக்கவும், வளர்க்கவும் வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஏனெனில், 76 வீதமான கண்டல் காடுகள் தற்போதைக்கு எமது நாட்டில் அழிவடைந்துள்ளதாகவே தெரிய வருகிறது.

குறிப்பாக, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது பல உயிர்களைக் காப்பாற்றியதில் இந்த கண்டல் காடுகளுக்கு அதிகமான பங்கு இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்பதை நான் இங்கு உணர்த்த விரும்புகின்றேன்.

இறுதியாக, நீர்ப்பாசன மற்றும் நீர் வளமூல முகாமைத்துவ அமைச்சு தொடர்பான எனது சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிள்றேன்:-

சில நீர்த் திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய, பயனுள்ள சில திட்டங்களை நான் இங்கு முன்வைத்துள்ளேன். குறிப்பாக, பூநரிக் குளத் திட்டம், வன்னேரிக் குளத் திட்டம், பாலியாற்றுத் திட்டம் என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். இந்தத் திட்டங்களை உரிய வகையில் மேற்கொண்டால் வடக்கில் எமது மக்களில் பெரும்பாலானவர்களுக்கு குடி நீரும், விவசாயம், கால்நடைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நீரும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இவை தொடர்பில் நானிங்கு நிலையியற் கட்டளையின் கீழ் கொண்டு வந்தபோது, இவை தொடர்பில் மாகாண அரசுடன் கதைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா  அவர்கள் தெரிவித்திருந்தார்.

எனினும், வடக்கு மாகாண சபையானது எமது மக்களின் நலன் சார்ந்த எவ்விதமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடிய தகுதியில் இல்லை என்பதை வடக்கு மக்கள் மட்டுமல்லாது இந்த நாட்டிலும் ஏன் வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர் மக்களும் நன்கறிவார்கள்.

வடக்கு மாகாண சபையானது எமது மக்களின் தேவைகளை – பிரச்சினைகளைத் தீர்க்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், எமது மக்கள் பாரிய அழிவை நோக்கியே செல்ல வேண்டிய நிலைமை எற்படும் என்பதால்தான், நான் எமது மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து இந்தச் சபையிலே கொண்டு வந்து, அவற்றைப் போதியளவு தீர்ப்பதற்கு முயற்சிக்கின்றேன் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில், வடக்கிலே குறிப்பாக பல விவசாயக் குளங்கள் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. ஏற்கனவே பல குளங்கள் புனரமைப்புச் செய்திருந்தும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக அவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, வடக்கைப் பொறுத்த வரையில் ஐந்து மாவட்டங்களிலும் உரிய குளங்களை இனங்கண்டு, அவற்றைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-6 copy

Related posts: