வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, March 14th, 2019

கடந்த கால யுத்தம், பல்வேறு தொடர்ந்தேர்ச்சியான இயற்கை அனர்த்தப் பாதிப்புகள், இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய காலங்களில் தேசிய அபிவிருத்திகளால் காட்டப்பட்டு வந்த புறக்கணிப்புகள் என பல்துறைகள் சார்ந்தும் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலைக்கு ஆளாகியிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள், யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிக்குள் துரித அபிவிருத்திகளைக் கண்டிருந்தாலும், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தற்போது அந்த அபிவிருத்தி நிலையானது மந்தப் போக்கினையே கொண்டதாக இருப்பதும்,

யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டங்களில் துரித அபிவிருத்தித் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்ட போதிலும், வடக்கு கிழக்கு மாகாண மக்களது உணர்வு ரீதியிலான பிரச்சினைகள் முதற்கொண்டு, அடிப்படை, பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அக்கறை காட்டப்படாத நிலையில், இன்று எமது மக்கள் பிரச்சினைகளுக்குள் பிரச்சினையாக வாழ வேண்டியே நிலையே ஏற்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அரசியல் ரீதியில் எமக்குக் கிடைத்திருந்த குறைந்தபட்ச பலத்தினைக் கொண்டு, யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரும் மத்திய அரசுகளுடன் இணைந்திருந்த நிலையிலேயே எம்மால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு உதவித் திட்டங்களை – பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியுமாக இருந்தது.

அதுவும், யுத்தத்தில் ஈடுபட்டிருந்த மற்றும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மத்திய அரசுகளோடு எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் எமது மக்களுக்கு அக்காலகட்டத்தில் பல்வேறு உதவிகளை நாம் மேற்கொண்டிருந்தோம். அக்காலகட்டத்தில் அத்தகைய உதவிகள் எமது மக்களுக்குக் கிடைக்காதிருந்திருப்பின் எமது மக்களின் அழிவுகள் – பாதிப்புகள் இதைவிட அதிகமாக இருந்திருக்கும் என்பதை எமது மக்கள் உணர்வார்கள்.

ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. யுத்தம் என்றொன்றில்லை. நல்லாட்சி என்று கூறிக் கொண்டே இந்த ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. அன்று இந்த ஆட்சியை கொண்டு வந்ததாகக் கூறிக் கொண்டவர்களாக, இன்று இந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளவர்களாக, எமது மக்களின் அதிகளவிலான வாக்குகளை அபகரித்துக் கொண்டவர்களாக தமிழ்த் தரப்பினர் இருக்கின்றனர்.

எனவே, இந்த ஆட்சியில் பேரம் பேச வேண்டிய போதியளவு வாய்ப்புகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அதுவும், ஆளுங்கட்சியிலேயே இருக்கின்றார்கள். இவர்கள் இந்த அரசுக்கு ஆதரவளிக்காவிட்டால், இந்த அரசு தற்போதுள்ள அறுதி பெரும்பான்மையையும் இழந்துவிடும் நிலை இருக்கின்றது.

ஆகவே, இந்த அரசைக் கொண்டு, எமது மக்களது இதுவரையில் தீராதிருக்கும் பிரச்சினைகளுக்கு இவர்களால் தீர்வுகளை எட்ட முடியும். என்றாலும், இவர்கள் அவ்வாறு எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு – தற்போது கிடைத்திருக்கின்ற இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தவேனும் முன்வருவதாக இல்லை.

நாடாளுமன்றத்திலே ஆளுங்கட்சியுடன் இணைந்து தங்களுக்கான அனைத்தையும் செய்து கொள்கின்ற இவர்கள், எமது மக்களின் பிரச்சினைகள் என வரும்போது மட்டும் ஏதோ ஆளுங்கட்சிக்கு வெளியில் இருப்பவர்களைப் போன்று கதைக்கின்றனர்.

இன்று ‘வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவதைப்’ போல், ‘இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்காது’ என்றும் ‘நம்பிக்கை தகர்கிறது’ என்றும் மக்களைப் பார்த்து கூறுகிறார்கள். இந்த ஆட்சியில் இவர்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் இருந்தும், இந்த ஆட்சியில் முடியாதென்றால், இவர்கள் ஜனாதிபதி, பிரதமராகியா எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்க்கிறார்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

எமது மக்கள் மீதான உண்மையான நேசமும், அக்கறையும், ஆர்வமும், ஆளுமையும் இவர்களுக்கு இருந்திருந்தால், இந்நேரம் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் பலவும் தீர்ந்திருக்கும்.

ஏற்கனவே வடக்கு மாகாண சபையை ஐந்து வருட காலமாக முடக்கி வைத்தும், மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வைத்தும், எமது மக்களின் பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டதால், எவ்விதமான வாழ்வாதாராங்களுக்கும் வழியின்றிய எமது மக்கள் நுண்கடன் போன்ற பாரிய சுமைகளுக்கும், தற்கொலை போன்ற கொடிய செயல்களுக்கும் தங்களைத் திணித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்றும்கூட இந்த அரசுடன் பங்காளி கட்சிகளாக இணைந்திருக்கின்ற இவர்கள், அதன் மூலமாக எமது மக்களுக்கு எதுவும் செய்யாமல், எமது மக்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயற்பாடுகளைஞம் முடக்கி வருவதாகவே அறிய முடிகின்றது.

Related posts:


தணிக்கை தகர்க்கவும், தர்மம் காக்கவும் வேண்டும் - நூலாசிரியருக்கு செயலாளர் நாயகம் வாழ்த்து!
நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித மக்களுக்கு அதை இலவசமாக வழங்...
ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் திடீர் வீழ்ச்சி - பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உர...