வடக்கு கிழக்கில் நாம் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றோம் – கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் !
Monday, December 11th, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்குப் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுவதாகத் தீர்மானித்துள்ளோமென கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கட்சித் தோழர்களும் ஆதரவாளர்களும் ஐக்கியத்துடனும், புரிந்துணர்வுடனும் செயலாற்ற வேண்டியது அவசியமானது. அத்துடன், எமது கொள்கை நிலைப்பாட்டில் நாம் என்றுமே பின்வாங்கப் போவதில்லை என்பதுடன், இக்கொள்கை வழியூடாக மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் வீணைச் சின்னத்தில் போட்டியிடவே நாம் விரும்புகின்றோம். எனவே, இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நாம் வெற்றிக்காக ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.
தற்போது மக்கள் உண்மை நிலவரங்களை உணர்ந்து கொண்டுள்ளார்கள். போலித் தேசியவாதிகளின் பொய் முகத்திரை தற்போது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு வருகின்றது. அத்துடன், அவர்களது முகாமும் பிளவடைந்துள்ளது. எனவே, இருக்கின்ற சூழலை சாதகமாகப் பயன்படுத்தி அதனூடாக மக்களுக்காகச் சேவை செய்ய நாம் எல்லோரும் திடசங்கற்பம் பூண வேண்டியது அவசியமாகும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
Related posts:
|
|
|


