வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்கத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2019

இயற்கையை எதிர்த்து வாழ்வதற்கான வசதிகளை செயற்கையாகவே ஏற்படுத்திக் கொள்கின்ற கொழும்பு நகரையும், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ நினைக்கின்ற வடக்கின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பது கடினமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் இலங்கை காணி மீட்டல் அபிவிருத்தி அதிகார சபை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கிலே காணி மீட்டல் என்கின்றபோது, முதலில் எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை மீட்பது என்ற பொருள் படுகின்றது.

வலிகாமம் வடக்கு, கேப்பாப்புலவு, நாச்சிக்குடா என எமது மக்கள் தங்களது சொந்த காணி, நில மீட்புக்காகப் போராடி வருகின்றனர்.

இதனிடையே வடமராட்சி கிழக்கில் 700 ஏக்கர், மண்டைதீவில் 600 ஏக்கர், என யாழ் மாவட்டத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலே உத்தரவேங்கை ஆலயக் காணி என காணிகள் சுவீகரிக்கப்பட்டும், முல்லைத்தீவில் கேப்பாப்புலவில் 526 ஏக்கர் என காணிகள் சுவீகரிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டும் வருவதாகத் தெரிய வருகின்றது.

யாழ்ப்பாணத்திலே சாந்தபுரம் தொடக்கம் தெல்லிப்பளை வரையில், ‘எமது நிலம் எமக்கே வேண்டும்’ என எமது மக்கள் போராட்டத்தில் இறங்கி வருகின்றனர்.

வலிகாமம் வடக்கு – தெல்லிப்பளை – வலிகாமம் கிழக்கு – கோப்பாய் ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகளைச் சார்ந்து சுமார் 6381 ஏக்கர், 38.91 பேர்ச் தனியார் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது. கிளிநொச்சி, பூநகரி பகுதியைச் சேர்ந்த பள்ளிக்குடா, பல்லவராயன்கட்டு, மட்கும்பான், பொன்னாவெளி, அரசபுரம், முழங்காவில் உள்ளிட்ட சுமார் 800 ஏக்கர் காணி எமது மக்கள் பயன்பாட்டிற்கு விடுபடாத நிலை தொடர்கின்றது.

மாதகல்லில் இருந்து காங்கேசன்துறை வரையிலான கடற்கரையை அண்டிய பகுதிகள் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்னுற்பத்திச் செயற்பாடுகளுக்காக சீனாவுடன் தொடர்பினைக் கொண்டிருக்கின்ற மலேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், மாதகல் பகுதியிலிருந்து சுமார் 25 வருடங்களாக வெளியேறியிருக்கின்ற சுமார் 279 குடும்பங்களின் நிலை கண்டு கொள்ளப்படவில்லை.

இவை எல்லாம் சதுப்பு நிலங்கள் அல்ல. எமது மக்கள் வாழ்ந்திருந்த வரலாற்று காணி, நிலங்கள்.

போகிற போக்கைப் பார்த்தால், மீளக் குடியேற வேண்டிய எமது மக்களை ஒரு புறமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, சீன, மலேசிய நாட்டுப் பிரஜைகள் நாளடைவில் வந்து குடிகொண்டு விடுகின்ற நிலை ஏற்படுமோ என எமது மக்கள் அஞ்சுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

வடக்கின் அபிவிருத்தி குறித்து காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயற்பட முன்வர வேண்டும்! நாடாளு...
சவால்களை எதிர்கொள்பவர்களாக பெண்கள் எழுச்சி கொள்ளவேண்டும் - சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு டக்ளஸ்...
படையினரை முழுமையாக வெளியேற்றக் கோரியவர்கள் நீண்டால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை - ஊடகவியலாளர் சந்த...

வடக்கு மக்கள் தங்களது விவசாய நிலங்களுடன்  கடல் வளத்தையும் இழந்து நிற்கின்றார்கள் - நாடாளுமன்றில் டக்...
மன்னார் பனங்கட்டி கொட்டு கிராமிய அமைப்பு பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே யாழ்.ராணி விசேட ரயில் சேவை இன்று காலைமுதல...