உயிர்களைத் தவிர இழந்த அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, February 3rd, 2023

கடந்த காலத்தில் இடம்பெற்ற அழிவு யுத்தம் காரணமாக எமது மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் கட்சியின் தலைவர் என்பதற்கு அப்பால் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் என்ற அடிப்படையில், இந்த உத்தரவாதத்தினை அளிப்பதாக தெரிவிதார்.

வலி வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் ஒரு தொகுதியை பொது மக்களிடம் கைளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  கடற்றொழில் அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான இவ்வாறான நிகழ்வுகளில் அனைவரும் ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர், எமது மக்களுக்கு சொந்தமான காணிகளை மீண்டும் கையளிப்பது மாத்திரமன்றி, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றியினையும் தெரிவித்தார்.

வலி வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்  காணிகளிலில் 108 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் பலாலி அன்ரனிபுரத்தில் இடம்பெற்றது.

வலிகாமம் வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து 108 ஏக்கா் காணி நிலங்கள் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

பலாலி – அந்தனிபுரத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் சுவா்ண போதோட்ட யாழ்.மாவட்டச் செயலா் அம்பலவாணர் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளார்.

காங்கேசன்துறை – மத்தி (ஜே 234) – 50.59 ஏக்கா் / மயிலிட்டி – வடக்கு (ஜே 246) – 16.55 ஏக்கா் /  தென்மயிலை (ஜே 240) – 0.72 ஏக்கா்/ பலாலி – வடக்கு (ஜே 254) – 13.033 ஏக்கா்/ நகுலேஷ்வரம் (ஜே 226) -28 ஏக்கா், மேற்படி கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. மேலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியும் உள்ளடங்கியுள்ளது.

இந்த காணியில் யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து ஐந்து இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் மொத்தமாக 205 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐனாதிபதி பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் - டக்ளஸ் ...
இறால் பிடிப்பு தொழிலை மேற்கொள்வதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகண்டு தாருங்கள் - டக்ளஸ் எம்.பியிடம் ...
சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்...