வடக்கில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்க அனைவரும் ஓரணி திரள வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

Thursday, April 7th, 2016

நாட்டில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ள ஒரு சூழலில் அதற்கேற்ற வகையில் தற்போது வடக்கிலும் போதைப் பொருட்களின் பாவனை படிப்படியாக அதிகரித்து வருகின்ற நிலைமையே காணப்படுகின்றது. இலங்கைக்கு போதைப் பொருட்கள் மற்றும் கேரள கஞ்சா போன்றவற்றைக் கடத்துபவர்கள் வடக்கு கடல் மார்க்கத்தைப் பிரதானமாகக் கொண்டுள்ளதால், இப் பொருட்களின் பாவனைக்கு வடக்கு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்ற சூழ்நிலை அதிகம் காணப்படுகிறது. எனவே, இதனை தடுத்து நிறுத்த எமது சமுதாயம் சார்ந்த அக்கறையுள்ள அனைவரும் ஓரணி திரள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், வடக்கில் தற்போது எமது சமூகத்தை சீரழிவுகளில் தள்ளக்கூடிய பல்வேறு விடயங்கள் அரங்கேற்றப்பட்டுவரும் நிலையில் போதைப் பொருளானது அதில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் ஏராளம்.

கடந்த கால யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எமது சமுதாயத்தில் இவ்வாறான சமூகச் சீரழிவுகள் பலத்த தாக்கத்தினை ஏற்படுத்திவரும் நிலையில் காலப்போக்கில் இதன் தாக்கங்கள் மென்மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தல் போன்ற செயற்பாடுகளை ஒழிக்க காவல்த்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இந்த நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதையே அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அத்துடன், மதம், சமூகம் மற்றும் பொது விடயங்கள் தொடர்பில் செயற்பட்டு வருகின்ற பொது அமைப்புகள், புத்திஜீவிகள், கல்விச் சமூகத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர், சனசமூக நிலையங்களின் செயற்பாட்டாளர்கள், எமது மக்களின் அரசியல் பிரதிநிதிகள் உட்பட்ட சமூக அக்கறை சார்ந்த அனைவரும் ஓரணி திரண்டு, எமது சமுதாயத்திலிருந்து போதைப் பொருள் பாவனையை ஒழிக்க முன்வர வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

விடுமுறை நாட்களிலும் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்யும் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதி...
ரின் மீன் உற்பத்தி ஆலைகளை மீளவும் இயக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
உலக புரத தேவையை நீர் வேளாண்மை ஊடாகவே நிறைவு செய்ய முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!