வடக்கில் தென்பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவும்! – டக்ளஸ் தேவானந்தா மீண்டும் வலியுறுத்து

வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறியதும், தடை செய்யப்பட்டதுமான கடற்றொழில் நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற எமது கடற்றொழிலாளர்களுக்கு தென் பகுதி கடற்றொழிலாளர்களினாலும் பாரிய பாதிப்புகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருவதை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இச் செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், முல்லைதீவு மாவட்டத்தில் தென் பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்தக் கோரி பல தடவைகள் வலியுறுத்தியுள்ளேன். இதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தாங்கள் உறுதியளித்துள்ள போதிலும், அச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரியவரவில்லை. இதற்கென தாங்கள் அமைத்த குழுவும் உரிய முறையில் நடவடிக்கைகளை எடுத்ததாகவும் இல்லை.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளிலும் தென் மாகாண கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்வதாகத் தொடர்ந்தும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இவர்களால் எமது கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதுடன், எமது கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் உபகரணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில்; பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி இன்றுவரையிலும் அப் பாதிப்புகளிலிருந்து மீள இயலாதிருக்கும் எமது கடற்றொழிலாளர்களின் நிலையை எண்ணி, அவர்களுக்கு மேலும் உதவிகளை வழங்கவேண்டியுள்ள நிலையில், இவ்வாறான பாதிப்புகளை உண்டாக்குவது எவ்வகையிலும் மனித நேய செயலாகாது. எனவே, இத்தகைய செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|