வடக்கில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துவிட்டது : கட்டப்படுத்த நடவடிக்கை தேவை- செயலாளர் நாயகம்!

Saturday, November 25th, 2017

தற்போது வடக்கைப் பொறுத்தவரையில் குரங்குகளின் தொல்லைகளும், முதலைகளின் தொல்லைகளும் மிகவும் அதிகரித்துள்ளன. யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதிகளில் இப்பிரச்சினை மிக அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே, இதற்கும் ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் காணி, நாடாளுமன்ற அலுவல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில், வலுவாதார மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பயிர் நிலங்களில் மட்டுமல்லாது, மக்களது வீடுகளுக்குள்ளும் நுழைந்து, வீடுகளையும், வீட்டுப் பொருட்களையும் நாசப்படுத்தகின்றன. வீட்டுத் தோட்டங்கள் அழிக்கப்படுகின்றன.

இதற்கொரு ஏற்பாடாக வாயு துப்பாக்கிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. இதில் சாதகமான நிலைமைகளைப் போன்றே பாதகமான நிலைமைகளும் இருப்பதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அந்தந்தப் பகுதிகளுக்கு பொருத்தமான வாயு துப்பாக்கி வகைகளைப் பயன்படுத்த முடியும். தற்போது எமது நாட்டிலே இவ்வகைத் துப்பாக்கிகள் 11 ஆயிரம் ரூபா முதல் 2 இலட்சம் ரூபா வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தியாவில் தற்போது குரங்குகளிலிருந்து விவசாயத்தை காப்பாற்றும் நோக்கில் ஒரு வகை அதிர்வு அலைகளை ஏற்படுத்துகின்ற சிறு விசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக இந்திய விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான விலை நம் நாட்டு ரூபாவில் கிட்டத்தட்ட சுமார் 70,000 ரூபாவாகும் என்பதால், இது குறித்தும் ஆராய்ந்து பார்க்குமாறு கௌரவ அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்; கொள்கின்றேன்.

Related posts:

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது- டக்ளஸ் தேவானந்தா
வரி அறவீடுகள் என்பது நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்க வேண்டும் - டக்ளஸ் எம்பி வலியுறுத்து...
ஜா எல மீன்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை