வடக்கில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலை மேற்கொள்ள வழிசமைத்துக் கொடுத்தவர்கள் நாம் – பாஷையூரில் டக்ளஸ் எம்.பி!

Thursday, February 8th, 2018

எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான தொழில்களை மேற்கொள்வதற்கு நாமே வழிசமைத்துக் கொடுத்திருந்தோம். அதனால்தான் இன்று அவர்களது வாழ்க்கைத்தரம் மேம்பாடு கண்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பாஷையூரில் நேற்றையதினம் (07) நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற இறுதிக்கட்ட பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 40 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுகின்றோம். இந்த உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் எமக்கு மக்கள் முழுமையானதொரு ஆதரவைத் தரும் பட்சத்தில் அவர்களது அன்றாட அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பிரச்சினைகளுக்கு நிச்சயம் உரிய தீர்வுகளைப் பெற்றுத்தருவோம்.

கடந்தகாலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற குறைந்தளவிலான அரசியல் பலத்தைக் கொண்டு நாம் எவற்றையெல்லாம் மக்கள் நலன்சார்ந்து செய்துள்ளோம் என்பதை மக்கள் மட்டுமல்லாது வரலாறும் பதிவுசெய்துள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டுமல்லாது எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளதான வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும் மக்கள் தமது ஆதரவைத் தந்து எமது கட்சியை வெல்லவைப்பார்களேயானால் அவர்களது வாழக்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு நாம் பக்கபலமாக இருப்போம்.

மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடாகும். இதற்காக நாம் கடந்தகாலங்களில் பல தியாகங்களையும் சோதனைகளையும் சந்தித்துள்ளோம்.

பாஷையூர் மக்கள் கடற்றொழிலை தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வு நிலையை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் குறித்த தொழில்துறையை நவீன மயப்படுத்துவதற்கும் பல திட்டங்களை முன்னெடுக்கவும் தயராக இருக்கின்றோம்.

ஏற்கனவே எமது கடற்றொழிலாளர்கள் மட்டுமல்ல விவசாயிகள் பனந்தொழில்துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோரது பிரச்சினைகளுக்கும் நாம் உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.அந்தவகையில்தான் உள்ளூராட்சி தேர்தலை மக்கள் தமக்கு சாதகமாக எம்மைப் பலப்படுத்தி வெல்லவைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related posts: