யுத்த வெற்றி இல்லை என்பதுடன் தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும்.! டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, May 13th, 2016

கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்பட மாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கதாகுமெனத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அதே போன்று தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாகக் கருதப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாத்து வரக்கூடிய அனைத்தையும் அகற்றவும் இந்த அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், யுத்த வெற்றி விழாக்கள் கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த கால யுத்தம் தொடர்பான ஞாபகார்த்த நிகழ்வுகள் எவையாயினும், அவற்றால் தமிழ் பேசும் மக்களின் உணர்வுகள் புண்படக்கூடாது என்ற விடயத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம். எமது இந்த நிலைப்பாட்டை இந்த அரசு அவதானத்தில் எடுத்து, அதனை நடைமுறைப்படுத்தியிருப்பதானது, தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நல்ல ஆரம்பங்களில் ஒன்றாகுமென நாம் கருதுகின்றோம்.

அதே நேரம், கடந்த கால யுத்தம் காரணமாக இறந்த எமது உறவுகளை நினைவுகூறும் முகமாக ஒரு நினைவுத்தூபியும், நினைவுச் சதுக்கமும் வடக்கில் அமைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் நாம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி இருந்தோம். அதற்கும் இந்த அரசு இணக்கம் கண்டிருப்பதை நாம் வரவேற்கின்றோம்.

அத்துடன்,  தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாக சில அழிவுச் சின்னங்கள் பாதுகாத்து, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை எமது மக்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கின்ற ஒரு விடயமாகுமென்பதையும் நாம் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றோம். எனவே, அவை அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடங்களை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்த இந்த அரசு முன்வர வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குடாநாட்டை அச்சுறுத்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்வேன் – வேலணையில் அமைச்ச...
மன்னார், சுவாமி தோட்டம் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான காணி விவகாரம் - தீர்வு காண அமைச்சர் டக்ளஸ...

நிமிர்ந்தெழும் காலத்தை வெல்ல நிரந்தர ஒளியேற்றுவோம்! தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!
யுத்த அழிவை தடுத்து நிறுத்த கூட்டமைப்பின் தலைமை விரும்பியிருக்கவில்லை - சபையில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
வடக்கில் நீர்வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு சுமார் 14 கோடி ரூபாய் – நீடித்த நன்மைகளை உறுதிப்படுத்துமாறு ...