யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2019

யுத்தம் முடிவுற்றதன் பிற்பட்ட காலப்பகுதிகளில் இம்மக்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் நோக்கில் அரசு விசேட திட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனாலும், துரதிர்ஸ்டவசமாக தமிழ் மக்களின் நலன் கருதா தமிழ் அரசியல் துரோகிகளை நோக்கி தமிழ் மக்களின் அரசியல் பலம் கேரள கஞ்சா போல் கடத்தப்பட்டமை காரணமாக எமது மக்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் வாய்க்கவில்லை. எமக்கு இருந்த குறைந்தளவு அரசியல் பலத்தினை வைத்து எம்மால் இயன்றளவு உதவிகளை எமது மக்களுக்கு செய்ய முடிந்திருந்தது எனினும் அது போதுமானதல்ல. எமக்கு போதிய அரசியல் அதிகாரங்கள் கிடைத்திருந்தால், எமது மக்களின் அடிப்படை மற்றும் பொருளாதாரப் பிரச்சினை முதல் அரசியல் தீர்வு வரையிலான பல்வேறு பிரச்சினைகள் இன்று நடைமுறை சாத்தியமான வகையில் தீர்க்கப்பட்டிருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நீங்களும் இத்தகைய பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கென விசேட பொருளாதார திட்டங்கள் எதையும் முன்வைப்பதாகவும் இல்லை. கடன் திட்டங்களை மாத்திரம் கடனுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக, இந்த சமுர்த்தித் திட்டத்திலாவது அம்மக்களில் தகுதியானவர்களை உள்வாங்கிக் கொள்வதற்கு இனியாவது உடனடி நடவடிக்கைகளை எடுங்கள் என்றே கேட்டுக் கொள்கின்றேன்.

அதேநேரம், 50 ஆயிரம் குடும்பங்களுக்கான விசேட வாழ்வாதார கருத்திட்டம் பற்றிக் கூறப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென இதனது பங்களிப்பு என்ன என்பது தொடர்பில் தெளிவின்மை காணப்படுகின்றது. 50 வீத மானிய அடிப்படையிலான திட்டம் இது என்பதால் கடந்தகால பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தது 90 வீதமான மானிய அடிப்படையில் இத் திட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டால், எமது மக்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும்  என்ற விடயத்தையும்; இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், சமுர்த்தி அலுவலர்கள் தொடர்பிலான தொழில் ரீதியிலான சிக்கல்கள் இன்னும் தீர்ந்ததாக இல்லை. சமுர்த்தி அதிகார சபையானது சமுர்த்தி திணைக்களமாக மாற்றப்பட்டதன் பின்னர், நிரந்தர நியமனங்கள் தொடர்பில் சிக்கல்கள் தொடருவதால், மேற்படி அலுவலர்கள் ஊதியம், பதவியுயர்வு, ஓய்வூதியம் போன்ற விடயங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறதே அன்றி, அதற்கென முடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை. எனவே, இவ்விடயம் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:

அசாதாரண காலங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர்கள் நிரந்தரமாகக்கப்பட வேண்டும் - டக...
‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் –...
அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில்முறைகளை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...