முதலமைச்சர் நியதிச் சட்டமும் வெறும் ஆவணமாக முடக்கப்பட்டுவிடக்கூடாது !

புதிய அரசாங்கமும், வட மாகாண ஆளுநரும் வெளிப்படுத்தும் நல்லிணக்கச் சமிக்ஞையை வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்று மூன்று வருடங்கள் ஆகின்றபோதும் குறிப்பிடும்படியான எந்தவொரு முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பதிவிட்டிருப்பதாவது –
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நிதியத்துக்கான நியதிச் சட்டம் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் (14) வடக்கு மாகாண சபையில் இந்த நியதிச் சட்டம் பிரேரணையாக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டபோது எதிர்க்கட்சியாக இருக்கும் ஈ.பி.டி.பியும் அதகரிப்பதென முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் நிதியத்தை ஏற்படுத்துவதற்கு சில தடைகள் இருந்தது. புதிய ஆட்சியில் அந்தத் தடைகள் இல்லை. எனவே வடமாகாண ஆளுநர் அதற்கான தனது ஒப்புதலை சில திருத்தங்களுடன் வழங்கியிருக்கின்றார்.
வடக்கு மாகாண சபையில் ஈ.பி.டி.பி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருந்தாலும், மாகாண சபையை முன்னோக்கிச் செயற்படுத்துவதற்கும், நியதிச் சட்டங்கள் போன்ற அவசியமாக பிரேரணைகளுக்கும் ஆதரவை வழங்கி வருகின்றது.
ஆனால் வடக்கு மாகாண சபை, 54 சபை அமர்வுகளை நடத்தியதையும், நூற்றுக்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றை வெறும் கோப்புக்களாகப் போட்டதையும் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை என்பதே வடக்கு தமிழ் மக்களின் முறைப்பாடாகக் கூறப்படுகின்றது.
வடக்கு மாகாண சபையை சரியாக செயற்படுத்தினால் அது ‘அமுத சுரபி’ என்று நான் ஏற்கெனவே கூறியிருக்கின்றேன். ‘அமுத சுரபியை பிச்சைப்பாத்திரமாக’ ஏந்திக் கொண்டிருக்கும் அவலத்தை வடக்கு மாகாண சபையில்தான் பார்க்கின்றேன்.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கி வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, அதன் நிர்வாகத் திறமையின்மையையும், அதன் உறுப்பினர்கள் மீதான மோசடி மற்றும் அசமந்தப்போக்கினையும் கண்டு கொள்ளும் திராணியற்றதாகவே இருக்கின்றது.
மூன்று வருடங்களை வீணடித்துவிட்ட வடக்கு மாகாணசபை ஆட்சியாளர்கள் எதிர்காலத்திலாவது பொறுப்புடனும், வடக்கு மாகாணத்திற்கும், மக்களுக்கும், பயனுள்ளவகையில் செயற்பட வேண்டும்.
முதலமைச்சர் நியதிச் சட்டமும் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப்போன்று வெறும் ஆவணமாக முடக்கப்பட்டுவிடக்கூடாது.
மாகாண சபை அதிகாரங்கள் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களிடம் போலித்தேசியம் பேசியும், அரசுடன் சுய இலாப இணக்க அரசியல் நடத்தியும் பெற்றுக் கொள்ளப்பட்டதல்ல.
அது தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும் போராட முன்வந்து தமது உயிர்களையே தியாகம் செய்ய முன்வந்த அனைத்து இயக்கப் போராளிகளினதும் உண்மையான போராட்டங்களாலும், உயிர்த் தியாகங்களாலும் பெற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
அத்தகைய உயரிய இலட்சியத்தை புரிந்துகொள்ளாமல், மாகாண சபை அதிகாரங்களை சுய இலாப அரசியலுக்காக துஸ்பிரயோகம் செய்யாதீர்கள் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|