மலையக மக்களின் உரிமைப் போராட்டம் முடிவற்றுத் தொடர்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 24th, 2018

மலையக மக்கள் தங்களுக்கு வருகின்ற கடிதங்களைக்கூட பெற முடியாத நிலையில் உரிமையின்றிய மக்களாகவே இன்னமும் வாழ்கிறார்கள். இரண்டு வருடங்களாக இம் மக்களுக்கு வந்துள்ள கடிதங்களை இம் மக்களுக்கு வழங்காமல் முடக்கி வைத்திருந்த தோட்ட நிர்வாகங்கள் குறித்தும் செய்திகள் இல்லாமல் இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை தேயிலைச் சபை (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

தொடர் வீட்டு முறைமையிலிருந்து இந்த மக்களின் இருப்பிடங்கள் தனி வீட்டுத் திட்டங்களாக இப்போது மாற்றப்பட்டு வந்தாலும், இம் மக்கள் அனைவரும் அவற்றின் முழுமையான பயன்களைப் பெற இன்னும் பல வருடங்கள் செல்லும் என்ற நிலையே காணப்படுகின்றது. அதிலும், பாரபட்சங்கள் காட்டப்படும் நிலைமைகளும் இல்லாமல் இல்லை எனக் கூறப்படுகின்றது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலே வாழுகின்ற மலையக மக்களின் நிலை இதுவாகும் என்கின்றபோது, சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் தோட்டங்கள் சார்ந்து பணியாற்றுகின்ற தமிழ்  மக்கள் தொடர்பில் கவனிப்பார் எவருமே இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

இன்று தேயிலை உற்பத்தியை நோக்குகின்றபோது பெருந்தோட்டக் கம்பனிகள் நூற்றுக்கு சுமார் 25 வீதமான உற்பத்தியை  மேற்கொள்கின்ற நிலையில், 75 வீதமான உற்பத்திகளை சிறு தோட்ட உரிமையாளர்களின் கீழான தோட்டங்களே உற்பத்தி செய்கின்றன. என்றாலும், அதிகளவிலான மக்கள் பெருந்தோட்டத்துறையின் கீழேயே இன்னமும் இருக்கின்றனர்.

இவ்வாறு பெருந்தோட்டத்துறைப் பிரிவுகளில் அதிகளவிலான மக்கள் இருக்கின்ற நிலையில், இம் மக்களது எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் இப்போதே எழ ஆரம்பித்துள்ளன. அதாவது, இந்த மக்களின் இருப்பின் எதிர்காலம் என்னவாகும்? என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.

உரிய பராமரிப்பின்மை, அர்ப்பணத் தன்மையின்மை காரணமாக இன்று தேயிலைத் தோட்டங்கள் காடுகளாக மாறி வருகின்றன. இலாப ஈட்டல்களை மாத்திரமே ஒரே நோக்கமாகக் கொண்டு, கம்பனிகள் செற்பட்டு வருகின்றன. இதனை இந்த அரசு தனது உடனடி அவதானத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதேநேரம் களுத்தறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இன்று தேயிலைத் தோட்டங்கள் படிப்படியாக வேற்று பாவனைகளுக்காக மாற்றப்பட்டு வருகின்ற நிலைமைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இங்கே வாழுகின்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக வசதிகள் அற்ற, குடியிருப்புகளுக்கு ஏற்பு இல்லாத பகுதிகள் வழங்கப்பட்டு, குதிரை லயங்கள் அமைப்பதற்காக நல்ல இடங்களை ஒதுக்குகின்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

அந்த வகையில், இந்த நாட்டு தேயிலையை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அத்துடன், அத் துறை சார்ந்த தொழிலாளர்களது நலன்களிலும், தோட்டங்களின் நலன் சார்ந்தும் சிந்தித்து செயற்பட முன்வர வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றேன்.

Untitled-17 copy

Related posts:

இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க தவறியமையே நாட்டில் அசம்பாவிதங்கள் தொடர காரணம் – நாடாளும...
ஆட்சியில் பங்கெடுத்துள்ள கூட்டமைப்பு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது - ஈ.பி.டி.பி தெரிவிப...
பேலியகொட மீன் சந்தை - இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் - மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அ...