மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு!

Friday, February 17th, 2023

மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில்சார் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறலினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக சுட்டிக்காட்டிய கடற்றொழிலாளர்கள்,   குறித்த அத்துமீறலை கட்டுப்படுத்துவதற்கு போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.

கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்ட விரோத தொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், முழுமையாக சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழிலாளர்களின் பங்களிப்பின் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 17.02.2023

000

Related posts: