மே தின உரை – 2017

Monday, May 1st, 2017

எமது நாட்டினை அனைத்து துறைகள் சார்ந்தும் உன்னத நிலையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் தாய் நாட்டின் இறைமையையும் வளங்களையும் பாதுகாத்து எமது மக்களின் சுபீட்சத்திற்காக நாம் அனைவரும் அரசியல் மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பால் – இன மத சமூக பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து அயராது உழைக்க வேண்டும் என்பதையே வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேதின உரையில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேதினக் கூட்டம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் கெடம்பே மைதானத்தில் நடைபெற்றது இந்த மேதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரை வருமாறு …

அனைவருக்கும் வணக்கம்!

உழைப்போர் தினத்தில் உழைக்கும் மக்களது உரிமைகளுக்காகவும் அம் மக்களின் நலன்களின் பாதுபாப்பிற்காகவும் அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் முன்னின்று குரல் கொடுத்து வருபவன் என்ற வகையில் அந்த உன்னத இலட்சியங்களுக்காக உறுதி எடுத்துக் கொண்டவர்களாக இன்றைய தினமும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் என்று முதலில் அனைவருக்கும் அழைப்பு விடுத்தவனாக…

எமது நாட்டைப் பொறுத்தவரையில் உழைக்கும் தோட்டத் தொழிலாள மக்களை மிக அதிகளவில் கொண்டிருக்கின்ற மலையகத்தின் தலைநகரமாகிய கண்டியிலே இன்று இந்த மே தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பொருத்தமான ஒரு ஏற்பாடாகவே திகழ்கின்றது. அந்த வகையில் இந்த நிகழ்வை இங்கு ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்திலே எமது தோட்டத் தொழிலாள மக்களது தொழிற்துறையானது அங்கீகரிக்கப்பட்டு அம் மக்களது தொழில் உரிமைகள் பேணப்படவும் இந்த மக்களும் ஏனைய சமூகங்களுடன் சமமான உரிமைகள் பெற்று கௌரவமாக வாழவும் அனைத்து ஏற்பாடுகளும் இந்த அரசில் எட்டப்பட வேண்டும் என்ற எனது நெடுநாளைய அபிலாசையை முன்வைத்தவனாக…

எமது நாட்டினை அனைத்து துறைகள் சார்ந்தும் உன்னத நிலையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் தாய் நாட்டின் இறைமையையும் வளங்களையும் பாதுகாத்து எமது மக்களின் சுபீட்சத்திற்காக நாம் அனைவரும் அரசியல் மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பால் – இன மத சமூக பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து அயராது உழைக்க வேண்டும் என்பதையே மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அந்த வகையிலே இன ஐக்கியத்திற்காகவும் இன சமத்துவ உரிமைகளுக்காகவும் இன்று நாம் இங்கு ஒன்றிணைந்து நிற்கின்றோம். இதே ஒற்றுமை நிலையானது தொடர்ந்து பேணப்பட்டு நாம் அனைவரும் இலங்கையர் என்ற பெருமிதத்துடனும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் பாதுகாப்புடன் நிலைத்து வாழக்கூடிய நிலையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

அதே நேரம் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பாதுகாக்கும் பயன்மிகுந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இன்று இந்த நாடு தள்ளப்பட்டிருக்கின்ற பொருளாதார சுமையிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது முயற்சிகளுக்கு கிடைத்துள்ள இன்னுமொரு வெற்றியாகவே எமக்கு ஜீ. எஸ். பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கவுள்ள நிலையில் இது போன்ற பல வெற்றிகளை நாம் மேலும் அடைய ஆக்கபூர்வமான பல முயற்சிகளை மேலும் முன்னெடுக்க வேண்டும்.

இதே போன்றே இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கமானது அடிமட்டத்திலிருந்தே ஆக்கப்பூர்வமானதாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். இதன் பொருட்டு தற்போது பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கு ஆரம்பந்தொட்டே வித்திட்டவர்கள் – அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் நாம் என்ற வகையில், தேசிய நல்லிணக்கத்திற்கான இந்த முயற்சிகள் மேலும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு, அது அனைத்து மக்கள் சார்ந்தும் நிலைத்து நிலைபெற வேண்டும் என்ற எமது விருப்பங்களையும் இந்தச் சந்தர்ப்பத்திலே கூறிவைக்க விரும்புகின்றேன்.

அந்த வகையிலே ஈ.பி.டி.பி. கட்சியினராகிய நாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் இந்த நாட்டிலே தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதன் ஊடாகவே எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற கொள்கை அடிப்படையில் வடக்குக்கும் தெற்கிற்குமான உறவுப் பாலமாகவே தொடர்நதும் செயற்பட்டு வருகின்றோம். இந்த வழிமுறைமீது இன்னும் நம்பிக்கை வைத்தே இன்று இந்த வரலாற்றுப் புகழ்மிக்க கண்டி நகரிலும் நாம் ஒன்றிணைந்து எமது குரலினை இங்கு பதிவு செய்கின்றோம்.

இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டும் தேசிய நல்லிணக்கம் உருவாக்கம் பெறுவதை சிதைத்துக் கொண்டும் மக்களுக்கு வெறுமனே போலி தமிழ் – சிங்கள அதி தீவிர தேசிய வாத மற்றும் அடிப்படைவாத  உணர்ச்சிகளை ஊட்டிக் கொண்டும் தீவிர இனவாத ரீதியிலான கருத்துக்களை முன்வைத்துக் கொண்டும் இருப்பதால் அதற்கு எடுபட்டுப் போகின்ற மக்களது வாக்குகளை அபகரித்து சுயலாப அரசியல் நடத்த முடியுமே அன்றி எமது மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஒருபோதும் எம்மால் எட்ட முடியாது. அந்தவகையில் இவ்வாறான போலி தமிழ் – சிங்கள அதி தீவிர தேசிய வாதங்கள் இனவாதங்கள் அடிப்படைவாதங்கள் என்பன புறந்தள்ளப்படல் வேண்டும்.

எனவே நாம் கடந்து வந்த பாதையில் தென் பகுதி சிங்களத் தலைமைகளுடன் இணைந்து மேற்கொண்டிருந்த தேசிய நல்லிணக்கத்திற்கான பயணம் காரணமாக எம்மீது வீசப்பட்ட சேறுகள் ஏராளம். சுமத்தப்பட்ட போலி அரசியல் குற்றச்சாட்டுகள் ஏராளம். என்றாலும் அந்த சவால்களை எல்லாம் மீறியும் தாண்டியும் எமது இலட்சியப் பயணம் எமது மக்களுக்கான பிரச்சினைகளை நடைமுறை சாத்தியமாகத் தீர்க்கும் பயணமாக – வரலாறு எழுதிய பாடமாக தொடர்வதால் அன்று எம்மை ஏளனஞ் செய்து பார்த்தோர்கூட இன்று அதை எல்லாம் மறந்தவர்களாக எமது பாதையை நோக்கியே பயணப்பட ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய நிலையில் எம்முன்னே பாரிய கடமைகள் பல இருக்கின்றன.

எமது நாட்டை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த வேண்டும்.

உழைக்கும் மக்களின் கரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டின் அபிவிருத்தி தொழில்வாய்ப்பு விடயங்கள் மேலும் விருத்தி பெற வேண்டும்.

எமது நாட்டையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

நீண்ட காலங்களாகப் பாதிக்கப்பட்ட எமது மக்களின் உளக் காயங்களும் உடற் காயங்களும் ஆற்றப்பட்டு பரிகாரங்கள் காணப்பட வேண்டும்.

அந்த வகையிலே இங்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது முன்னிலையில் –

எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் விரைவாக அம்மக்களிடம் கைளிக்கப்படவும்

காணாமற்போனோர் குறித்து நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படவும் பரிகாரங்கள் கண்டறியப்படுவதற்கும்

இன்னும் விடுவிக்கப்படாமல் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு என்கின்ற மனிதாபிமான முறையில் விடுவிப்பதற்கும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தமிழ் மக்களது அரசியல் உரிமைகளுக்கான  தீர்வுத் திட்ட முயற்சிகளை விரைவு படுத்தவதற்கும் அல்லது ஆரம்ப கட்டம் என்ற அடிப்படையில் 13வது அரசிலமைப்புச் சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும்

உரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலையிட்டு எடுத்து உதவ வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொண்டு பிரிவினையற்ற ஒரு தேசத்தை நோக்கி நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற கொள்கைப் பற்றுடன் தொடர்ந்து உழைப்போம் என்ற நமபிக்கையுடன் விடைபெறுகின்றேன்.

Related posts:


யாழ்ப்பாணத்திலும்  நவீன வசதிகளுடன் கூடிய வானிலை அவதான நிலையம்  அமைப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ள...
வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக...
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த...