மட்டக்களப்பு கம்பஸ் மீதான குற்றச்சாட்டுக்கள்: யாருடைய தவறு, யாருக்கு பொறுப்பு? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, August 7th, 2019

இந்த நாட்டில் ஒரு பாரிய கட்டிடமொன்று கட்டப்பட்டு, அதனது பணிகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டு, அதனை திறப்பதற்கு அதோ, இதோ என இருக்கின்ற தருவாயில், அதனை அது வரையில் கண்டுபிடிக்காமல், இப்போதுதான் கண்டுபிடித்து, அது தொடர்பில் மாறி, மாறி உணர்ச்சிவசப்படசக்கூடிய விமர்சனங்களை முன்வைக்கின்ற ஆய்வாளர்கள் பலரும் இந்த நாட்டில் இருப்பதைப் பார்க்கின்றபோது, உண்மையிலேயே இது ஓர் ஆச்சரியமானதொரு நாடுதான்

என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் பற்றிய அவதானிப்புகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேணைத் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்  –

‘மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்’ என இங்கே இதனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தனியார் கல்வி நிலையத்திற்கு ‘பல்கலைக்கழகம்’ எனப் பெயர் சூட்டக்கூடிய – அல்லது வழங்கக்கூடிய அதிகாரம் உயர் கல்வி அமைச்சின் சட்டத்திற்கு அமைவாக முடியுமா? என்ற கேள்வி இங்கே முதலில் எழுகின்றது.

தனியார் பல்கலைக்கழக சட்ட மூலமொன்று கொண்டுவரப்பட உள்ளதாகவும், அதனை நீக்குமாறு கோரி கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டமொன்றுக்கு அண்மையில் நீங்கள் கண்ணீர்ப்புகை, நீர்த் தாரைகள் என்பன பிரயோகித்தீர்கள்.

இத்தகையதொரு நிலையில், மட்டக்களப்பில் எப்படி தனியார் பல்கலைக்கழகம் உருவாகி இருக்கின்றது? என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழாமல் இருக்க முடியாது.

ஆக, இப்படியே, பொறுப்பு கூற வேண்டியவர்களது கண்களை மறைத்து, நிறைய விடயங்கள் நடந்து விடுகின்றன. இறுதியில அது பற்றி கேள்வி கேட்டால், பொறுப்பு கூறுவதற்கு யாருமில்லாத நிலை என்பது இந்த நாட்டின் தொடர்கதையாகி உள்ளது.

இன்று இந்த நாட்டிலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களில் ஈடுபடுவது தொடர்பில் பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அரசாங்கத்துடன் இத்தகைய ஒப்பந்தங்களை செய்து கொள்வதிலிருந்து தவிர்த்து கொள்ள வேண்டும்.

இத்தகையதொரு நிலையில், இங்கே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஹிஸ்புல்லா அவர்களது தலைமையைக் கொண்ட ஸ்ரீலங்கா ஹிரா மன்றமும், இளைஞர் விவகார மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சும் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டது எந்த அடிப்படையில்? என்பது அடுத்து எழுகின்ற கேள்வியாக இருக்கின்றது.

இந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி இலங்கை வங்கி, கொள்ளுப்பிட்டிக் கிளையில் ‘பெற்றிகலோ கெம்பஸ் கொலேஜ் (பிரைவேட்) லிமிடட்’ என்ற பெயரில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்ததாகவும், பின்னர், 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி அந்த நிறுவனத்தின் பெயர் ‘பெற்றிகலோ கெம்பஸ் (பிரைவேட்) லிமிடட்’ என மாற்றப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் மூலமாக கடிதம் வாயிலாக வங்கிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இதன் பிரகாரம் அந்த வங்கிக் கணக்கின் பெயரும் ‘பெற்றிகலோ கெம்பஸ் (பிரைவேட்) லிமிடட்’ என மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், அலவ்வல் பேன்ங்க், ரியாத், சவூதி அரேபியா –வங்கியின் கணக்கு உரித்தாளரான அலி அப்துல்லா அலியுப்பாலி –என்பவரால் ஏழு தடவைகளில் இந்த இலங்கை வங்கியின் ‘பெற்றிகலோ கெம்பஸ் கொலேஜ் (பிரைவேட்) லிமிடட்’ என்ற கணக்கிற்கு 3.6 பில்லியன் ரூபா நிதி வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், எனினும், இந்த நிதி வைப்பிலிடப்பட்டபோது ‘பெற்றிகலோ கெம்பஸ் கொலேஜ் (பிரைவேட்) லிமிடட்’ என்ற பெயரில் ஒரு கணக்கு இலங்கை வங்கியில் செயற்பட்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

வங்கிகளைப் பொறுத்தவரையில், கணக்கின் ஒரு எழுத்தேனும் மாறுபட்டாலும் வைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனினும், இத்தகைய பாரியதொரு தொகையை பெயர் மாற்றப்பட்டதொரு வங்கிக் கணக்கின் வைப்பிற்கு ஏற்றுக் கொண்டது எந்த அடிப்படையில?; என்ற கேள்வி அடுத்து எழுகின்றது.

அடுத்து, இந்த நிதி எதன் அடிப்படையில் கிடைத்தது? என்ற கேள்விக்கு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்ற குழு முன்பாக மேற்படி நிறுவனத்தின் தற்போதைய தலைவர் எனக் கூறப்படுகின்ற ஹிராஸ் ஹிஸ்புல்லா, இது நன்கொடையாகக் கிடைத்தது எனக் கூறியுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இடம்பெற்றிருந்திருந்த ஒரு கலந்துரையாடலின்போது, மேற்படி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும், இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஹிஸ்புல்லாவும் இந்த நிதி கடனாகக் கிடைத்தது என்றும் கூறியுள்ள நிலையில், அந்தக் கடன் ஒப்பந்தம் தொடர்பில் வினவப்பட்டபோது, அந்த ஒப்பந்தம் முதலீட்டு சபைக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும், இலங்கை வங்கிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அத்தகைய ஒப்பந்தமொன்று தங்களுக்குக் கிடைக்கவில்லை என அந்த மூன்று நிறுவனங்களும் தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

ஆகவே, இந்த நிதி எதன் அடிப்படையில் பெறப்பட்டது? என்ற கேள்வி எழுகின்றது.

இங்கே இன்னுமொரு பாரதூரமான கேள்வி எழுகின்றது. தேசிய நிறுவனமொன்று வெளிநாட்டவரிடமிருந்து ஏதேனுமொரு கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், செலாவணி கட்டப்பாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக, செலாவணி கட்டுப்பாட்டாளர் மூலமாக அதற்கான விசேட அனுமதி பெறப்பட வேண்டும். இவர்கள் கூறுகின்ற வகையில் இது கடன் தொகை எனில், அதற்கென செலாவணி கட்டுப்பாட்டாளரிடமிருந்து அத்தகையதொரு விசேட அனுமதி பெறப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. எனவே, இத்தொகையினை மீள செலுத்துகின்றபோது அத்தகைய மீளச் செலுத்துகை செய்வதற்கும் உரிய வர்த்தக வங்கிக்கும் இயலாத நிலை ஏற்படும்.

ஆகவே, இது கடன் தொகையகாட்டும், அல்லது நன்கொடையாகட்டும், இலங்கையின் வெளிநாட்டு செலாவணி சட்டதிட்டங்களை மீறி பெறப்பட்ட நிதியாகும் அல்லவா? என்ற கேள்வியும் எழுகின்றது.

மேலும், இந்த நிறுவனம் அமையப் பெற்றிருக்கும் காணியானது, இலங்கை மகாவலி அதிகார சபையிலிருந்து 30 வருட குத்தகைக்கு எடுக்கப்பட்ட 35 ஏக்கர் காணி எனக் குறிப்பிடப்படுகின்றபோதும், அதற்கு மேலதிகமாக சுமார் 8 ஏக்கர் காணி எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதுடன், இக் கட்டிடம் அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும் வாகறை வடக்கு பிரதேச சபையினால் அத்தகையதொரு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

அந்த வகையில் இது சட்ட ரீதியலற்ற கட்டிடமா? என்ற கேள்வி எழுகின்றது.

எனவே, இந்த தனியார் நிறுவனம் தொடர்பில் இத்தனைக் கேள்விகள் எமது மக்களிடத்தே இருப்பதால், இதற்கான பதில்கள் முதலில் பெறப்பட வேண்டும். இந்த பதில்களை மேற்படி நிறுவனத்துடன் தொடர்புடையோர் மாத்திரமின்றி, அரச தரப்பிலும் வழங்கப்பட வேண்டி உள்ளன.

இதைத் தவிர முஸ்லிம் அடிப்படைவாதத்தை கற்பிப்பதற்காக அல்லது இஸ்லாமிய சட்டமான சரீஹா சட்டத்தை கற்பிப்பதற்காக இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டதா? என்பது குறித்து அறிவது வேறு விடயமாகும். அதனை உயர் கல்வி அமைச்சு கண்டறிய வேண்டும்.

அத்துடன், இந்த நாட்டில் கல்வி தொடர்பில் நிறுவனங்கள் செயற்படுகின்ற நிலையில் அவை எந்த வகையிலானதாக இருந்தாலும், இலங்கையின் கல்வி அமைச்சின், உயர் கல்வி அமைச்சின் கல்விக் கொள்கையை அடியொட்டியதாகவே இருத்தல் வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.

Related posts:

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்படாது – அமைச்சர் டக்ளிஸிடம் ஜனாதிபதி கோட்டாப...
அரசின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிக...
மக்களின் எதிர்பார்ப்புக்ளை நிறைவேற்றும் பயணம் தொடரும் - புகையிரத பயணம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரு...

வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்: நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆ...
வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று கள...
நாடு திரும்ப விரும்புகின்ற இலங்கையர்கள் பூர்வீக இடங்களில் கௌரவமாக வாழ வழியேற்படுத்தப்படும் - அமைச்சர...