மக்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடையக் கூடாது – அடிபணிந்தே இருக்க வேண்டும் என எண்ணும் சிலரே குந்தகம் விளைவிக்கின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2024

உணவுப் பாதுகாப்பு, எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களை பெருக்குதல், தேசிய உற்பத்தியினை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதி உற்பத்திகளின் மூலம் அதிகளவு அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வருதல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் நாம் எமது கடற்றொழில் அமைச்சின் ஊடாக கடற்றொழில் கைத்தொழிலையும், நீர் வேளாண்மையினையும் பரவலாகவும், அதிகரித்த அளவிலும் மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இத்தகைய நிலையில், எமது மக்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடையக் கூடாது எனவும், அவர்கள் அரசியல் ரீதியிலும், வாழ்வாதார ரீதியிலும் தங்களுக்கு அடிபணிந்தே இருக்க வேண்டும் எனவும் எண்ணுகின்ற சில தரப்பினர், எமது  முன்னெடுப்புகளுக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் செயற்பட்டு வருவது தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய நிலையில் இத் தரப்பினர் வடக்குக் கடலை பல்தேசியக் கம்பனிகளுக்கு தாரை வார்க்கப் போவதாக ஒரு கதையினை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

யானையைப் பார்த்த பார்வையற்றவரைப் போல், சில தமிழ் தரப்பினர் ஒரு நபரைப் பார்த்துவிட்டு, வடக்கில் பாதை செப்பனிடும் பணியில் சீன நாட்டவர்கள் ஈடுபடுவதாக முன்பு ஒரு முறை ஒருவர் தெரிவித்திருந்தார். பிறகு பார்க்கும் போது அந்த நபர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரர் எனத் தெரிய வந்தது.

வடக்கிலே எமது அமைச்சு, அவ்வப் பகுதிகளில் செயற்படுகின்ற கடற்றொழிலாளர் சங்கங்கள், பிரதேச செயலாளர்கள், தேசிய நீர்வாழ் உயிரினங்கள் செய்கை நிறுவகம், தேசிய நீர்வாழ் உயிரினங்கள் அபிவிருத்தி மற்றும் ஆய்வு முகவர் நிறுவகம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் போன்றவற்றின் அனுமதிகள் மற்றும் சிபாரிசுகளின் அடிப்படையில் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கே கடலட்டைப் பண்ணைகள் மற்றும் கடல் பாசி செய்கைகள், நண்டு வளர்ப்பு, இறால் வளர்ப்பு, மீனின உற்பத்தி போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு வாய்யப்பளித்து வருகின்றது.

இத்தகைய செயற்பாடுகளின்போது எந்தவொரு சிறு கடற்றொழில் கைத்தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையிலேயே வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமக்கிருக்கின்ற வளங்களை நாங்கள் சரியான முறையில், உச்ச பயன்பாடுகளை பெறத்தக்க வகைகள் பயன்படுத்தி வருகின்றோம். இதுவரை காலமும் ஒரு சிலர் வசமிருந்து வந்த கடலட்டை உற்பத்தி நடவடிக்கைகளை நாம் பலர் மத்தியில் விரிவுபடுத்தியிருக்கின்றோம். இதில் எந்தவொரு வெளிநாட்டவரும் ஈடுபடுத்தப்படவில்லை என்தையும் ஆணித்தரமாக நான் இந்த சபையிலே கூறிவைக்க விரும்புகின்றேன்.

000

Related posts: