மக்கள் நலனையே சிந்திப்பேன்: மக்கள் நலனையே செய்வேன் –  முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 9th, 2018

ஒருவிநாடி கிடைத்தாலும் அந்த ஒரு நொடிப்பொழுதையும் நான் எமது மக்களின் நலனுக்காகவே நிச்சயம் பயன்படுத்துவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மக்களுடைய பிரதிநிதிகள் என்று கூறப்படுபவர்கள் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களை கடந்தகாலங்களில் சரியாக பயன்படுத்தவில்லை. கடந்த மூன்றரை வருடங்களாக முன்னைய அரசு எமது மக்களுக்கான பணிகள் குறித்து ஆற்றலுடனும் அக்கறையுடனும் செய்யவில்லை என மக்களால் குறைகூறப்பட்டது.

அக்காலப் பகுதியில் இந்த வீட்டுத்திட்டம் தொடர்பில் எந்த வீடு எந்த அமைச்சுக்கு கொடுப்பது என்பது தொடர்பில் கூட காலம் கடத்தப்பட்டது.

ஆனாலும் இந்த மாதம் இறுதியில் 15 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு எமது அமைச்சினூடாக இயலுமான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். இந்த வீட்டுத்திட்டத்தில் புள்ளிகள் அடிப்படை தொடர்பிலும் பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந்தவிடயத்திலும் நாம் உரிய கவனம் செலுத்துவோம்.

இருந்தபோதிலும் முறைகேடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. எமது அமைச்சினூடாக குறைந்தளவிலான வீடுகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்காக 100 கோடி ரூபா நிதி கிடைத்துள்ளது. இந்த தொகை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. வருங் காலகட்டங்களில் இந்த திட்டங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இழுபறியிலிருந்த இந்த திட்டத்திற்கு தற்போது ஒரு முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண சபையின் கடந்த 5 வருடகால சேவைகளை பார்த்தால் பூச்சியமாகவே இருக்கின்றது. அதிகாரம் இல்லை என்று கூறியவர்கள் எவ்வாறு அதிகார துஸ்பிரயோகம் செய்தார்கள்? நிதி இல்லை என்றார்கள் எவ்வாறு நிதி மோசடி செய்தார்கள்? மக்கள் தெளிவாக இதை புரிந்துகொள்ள வேண்டும். வடக்கு மாகாணசபை முன்னாள் அவைத்தலைவர் சிவஞானம் கடந்த 5 வருட காலத்தை வீணடித்துவிட்டோம் என்றும் கூறியிருந்தார் என்பதனை இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.

அந்தவகையில் எமது அமைச்சின் முக்கிய நோக்கம் என்னவெனில் வறுமையை ஒழித்து எமது மக்களுக்கு ஒளிமயமான ஒரு எதிர்காலத்தை பெற்றுக்கொடுப்பதேயாகும்.

அத்துடன் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே நாம்  இப்பதவியை ஏற்றுள்ளோமே தவிர எமது சுயநலன்களுக்காக ஒருபோதும் அமைச்சுப் பதவியை பொறுப்பெடுக்கவில்லை என்றும் தெரிவித்த அமைச்சர், மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும்  அவர்களுடனான நல்லுறவை பயன்படுத்தி அதனூடாக மக்களின் மேம்பாட்டை செய்வதே எமது நோக்கமாகும்.

அத்துடன் சமுர்த்தி உதவித்திட்டம் பெறுவோரின் எண்ணிக்கை போதா நிலை காணப்படுவதாகவும் அடுத்த வருட முற்பகுதிக்குள் இதை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு  கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்க செய்வோம் என்றும் தெரிவித்தார்.

அது மாத்திரமன்று இம்மாவட்டத்தில் நந்திக்கடல், வட்டுவாகல் உள்ளிட்ட கடற்பகுதிகளை ஆழமாக்கி அதனூடாக தொழில் துறைகளை முன்னெடுப்பதனூடாக 5000 முதல் 10000 வரையிலான மக்கள் பயனடையக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் கூறிய அமைச்சர் சிறார்களுடைய போசாக்கு திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி கோழிவளர்ப்பு மற்றும் கால்நடை வளர்பினூடாக நீடித்த நிலையான வாழ்வாதாரத்தை பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த இழப்பீட்டுத் தொகையானது உண்மையிலேயே போதுமானதாக இல்லாதுவிட்டாலும் கிடைத்ததை எமது மக்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் இத்தொகையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

a

c

d

d0

Related posts:


அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நாட்டில் மதுபான உற்பத்திக்கு அரிசியைவழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது- ந...
எல்லை நிர்ணயத்தை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா?...
அமைச்சு பொறுப்புக்களை சிறப்பாக செயற்படுத்தியவர்கள் நாங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...