தமிழ் மக்களின் நியாயத்தை தென் இலங்கைத் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, January 18th, 2017

 

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை மேலும் பலப்படுத்துவதற்கு, கூட்டாகக் குரல் கொடுப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் எம்மோடு கை கோர்த்துக்கொள்ள வேண்டும். என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

ஈ.பி.டி.பி தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கையை தென் இலங்கை அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பின் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட கட்சியை சந்தித்தது.

இந்தச் சந்திப்பு முன்னாள் அமைச்சர் டி.யு குணசேகரவுடன் நடைபெற்றது. அந்தச் சந்திப்பில் மேற்படி கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் நியாயத்தை இனவாதிகளுக்குப் பயந்தே தென் இலங்கை அரசியல் முற்போக்குத் தலைமைகள் நிராகரிக்கின்றனர்.

அரசியல் லாபங்களுக்கு அப்பால், தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையை ஆராய்ந்து ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் சமத்துவமாகவும், உரிமைகளுடனும் வாழ்வதற்கான தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்கவேண்டும்.

கடந்த காலத்தில் ஆளுங்கட்சி ஒரு தீர்வைக் கொண்டு வரும்போது, அதை எதிர்க்கட்சி எதிர்ப்பது வழமையானது. ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை, பிரதானமான ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணங்கி ஆட்சி நடத்துகின்ற இந்த சந்தர்ப்பத்தை இரு கட்சிகளும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பொது எதிரணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தனாவும், இனவாதிகளுக்கு அடி பணியாமல் செயற்படும் சூழல் அமைந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வொன்றை வழங்க அரசு முன்வருமாக இருந்தால், தமிழ் பேசும் மக்களும், தமிழ் பேசும் கட்சிகளும் அரசின் முயற்சிக்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றே நம்புகின்றேன்.

தென் இலங்கை இனவாதிகளுக்கும், அரசியல் குழப்பவாதிகளுக்கும் அடிபணியாமல், இந்த அரசு பல தசாப்தங்களாக நீரு பூத்த நெருப்பாக கணன்று கொண்டிருக்கும் தேசிய இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணவேண்டும். அதற்கான புறச்சூழலை சிங்கள மக்களிடம் ஏற்படுத்துவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முயற்சித்து வருகின்றது. எமது முயற்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.யு குணசேகரா அவர்களுடனான சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் கட்சியின் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

3

2

1

Related posts: