மக்களின் தேவைகள் இன்னமும் பூரணப்படுத்தப்பட முடியாத நிலைமையே காணப்படுகின்றன – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, May 17th, 2017

ஆயுத வழிமுறையூடாகவே தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்ற நிலை 2009 மே வரை  நீடித்ததன் காரணமாகவவே எமது மக்கள் விலைமதிக்க முடியாத உயிர்களையும் சொத்துக்களையும் இழக்க நேர்ந்தது. இந்நிலையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் ஜனநாயக வழிமுறைகளுக்கூடாகவே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்பதை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றொம் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

தும்பளை கலப்பனாவத்தை பகுதியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் அரசியல் தலைமைகள் அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்து அதனூடாக எமது மக்களுக்கான தீர்வுகளை பெற்றுவிடமுடியும் என்ற நம்பிக்கையுடன் பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்

ஆனாலும் அவை அந்தந்தக்காலங்களில் பொய்த்துப்போனதன் காரணமாக தமிழர்களுக்கான தீர்வு என்பது ஆயுதப்போராட்டத்தினூடாகவே சாத்தியமாகும் என்பதை உணர்ந்துகொண்ட தமிழ் இளைஞர்கள் ஆயுத வழிமுறைப்போராட்டத்தை தேர்வுசெய்தனர்.

ஒருகாலகட்டத்தில் ஆயுதப்போராட்டத்தின் தேவை இருந்து வந்த போதிலும் 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுதப்போராட்டம் முற்றுப்பெற்று அவ் ஒப்பந்தத்தினூடான 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை நழுவவிட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவந்த ஆயுதப்போராட்டம் 2009 மே வரை நீடித்தது.

இப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெறும் வரையில் எமது இனம் அளவிடமுடியாத உயிர்களையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியாகவேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு முகம் கொடுக்கவேண்டியதாயிற்று.

இந்நிலையில் இன்று ஏற்பட்டுள்ள ஓரளவு அமைதிச் சூழலில் மக்கள் தமது இயல்புவாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருந்தாலும் அவை இன்னமும் பூரணப்படுத்தப்பட முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

எனவே மக்களின் தேவைகள் குறிப்பாக வீடமைப்பு குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் யாவும் நிவர்த்திசெய்யப்பட்டு மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடியதான சூழல் ஏற்படுத்தப்படவேண்டியது என்றும் சுட்டிக்காட்டினார்

Related posts: