மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே திருமலைக்கான விஜயத்தின் நோக்கம் – டக்ளஸ் தேவானந்தா!

மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை இனங்காண்பதும் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதுமே திருகோணமலை மாவட்டத்திற்கான எனது விஜயத்தின் நோக்கமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான விஷேட சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
நீண்டகாலமாக நான் இந்த மாவட்டத்திற்கு வரமுடியாத ஒரு நிலையில் தற்போது வருகைதந்தள்ளேன். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலப் பகுதிகளில் இப்பகுதிக்கு நான் அடிக்கடி வரவேண்டிய ஒரு சூழல் இருந்துவந்த நிலையில் அதன் பின்னரான காலப்பகுதியில் வரமுடியாதிருந்தது.
இந்நிலையில் நாளாந்தப் பிரச்சினைகள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு சரியான தீர்வுகளை அரசியல்வாதிகள் பெற்றுக்கொடுக்காமலும் தட்டிக்கழித்து வருவதாகவும் எமது கட்சிக்காரரும் நலன் விரும்பிகளும் எனது கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதனை அடுத்து நான் திருகோணமலை மாவட்டத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இங்கு வருகைதந்து இம்மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று அந்தந்த மக்களை நேரில் சந்தித்து அவர்கள் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகள் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளேன்.
இச்சந்திப்புக்களில் கலந்துகொண்ட மக்கள் தமது பல்வேறு விடயங்களை எனக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக தேர்தல் காலங்களில் எம்மிடம் வரும் அரசியல்வாதிகள் வெற்றுக் கோசங்களால் தமது வெற்றியை இலக்காகக்கொண்டு எமது பகுதிகளுக்கு வருகின்றார்களே அன்றி தேர்தல் முடிந்ததன் பிற்பாடு எமது பகுதிகளுக்கு வருவதும் இல்லை எமது குறைநிறைகளை கேட்டறிவதும் இல்லை என்று என்னிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் எனது விஜயம் தேர்தல் காலத்தை ஒட்டியதான விஜயமாக அமைந்துவிடவில்லை என்பதுடன் நடைமுறைச் சாத்தியமாகாத விடயங்களை கூறி மக்களை ஏமாற்றுவதும் எனது நோக்கமல்ல. மாறாக உண்மையான நிலவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களது எதிர்கால வளமான வாழ்வை உறுதிப்படுத்துவதும் எனது விஜயத்தின் நோக்கமாகும்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் நான் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு நாடாளுமன்றத்தில் மக்கள் எதிர்கொள்ளும் உடனடி மற்றும் நாளாந்த பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு முயற்சியையும் எடுத்துவருகின்றேன்.
தற்போது அமைந்துள்ள புதிய அரசுக்கு ஆதரவளிப்பதனூடாக தமிழ் மக்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டுவிடலாம் என கூறியவர்கள் இன்று வழமைபோல தமக்கான சுகபோக வசதிகள் கிடைத்ததன் பின்னர் அரசு சொன்னதை நிறைவேற்றவில்லை என அரசை குறைகூறிக்கொண்டு மக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளனர்.
இதுவரை காலமும் தமிழ் மக்காளால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளை தொடர்ந்தும் குறைகூறிக்கொண்டிருப்பதை விடுத்து எதிர்காலங்களில் சரியான அரசியல் தலைமைகளை தெரிவுசெய்வதனூடாகவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இலவகுவான தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
மக்கள் எமது கட்சிக்கு வழங்கிவரும் குறைந்தபட்ச அரசியல் அதிகாரங்களைக்கொண்டு மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளைச் செய்திருக்கின்றோம். எதிர்காலங்களில் மக்கள் எம்மோடு அணிதிரளும்போது மக்களுக்கான சேவைகளை நாம் மேலும் பன்மடங்காகவும் இலகுவாகவும் முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் நம்புகின்றேன்.
இதனிடையே ஊடகவியலாளர்களினதும் வருகை தந்திருந்த மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கும் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|