போதையற்ற தேசத்தை உருவாக்குவது எந்த வகையில் சாத்தியமாகும்? – சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Thursday, June 22nd, 2017

போதையற்ற தேசத்தை உருவாக்குவதற்காக இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டு வருகின்ற ஒரு நிலையிலேயே தென் ஆசிய நாடுகளில் மது பயன்படுத்தம் நாடுகளில் எமது நாடு முதலாவது இடத்தைப் பெற்றிருப்பதாகவும் இந்த வகையில் எமது நாடு உலகத் தர வரிசையில் 115ஆவது இடத்தில் இருப்பதாகவும் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மது பாவனையில் எமது நாடு இத்தகைய ஒரு நிலையில் இருக்கின்றபோது போதையற்ற தேசம் எப்படி? எப்போது எமது நாட்டில் சாத்தியமாகப் போகிறது? என்ற கேள்வி எழுவது நியாயமானதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (22) நாடாளுமன்றத்தில் மது வரிக் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர் எமது நாட்டைப் பொறுத்த வரையில் மது பாவனையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலைமை மிகவும் அதிகரித்து வேதனை தருகின்ற ஒரு போக்கினைக் கொண்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஒரு காலகட்டத்தில் கல்வியின்பால் கொண்டிருந்த அதீத பற்று காரணமாக பல்கலைக்கழக தரப்படுத்தலுக்கு எதிராகத் திரண்டிருந்த எமது இளைய சமுதாயம் இந்தத் தரப்படுத்தலையும் ஒரு பிரதான காரணமாகக் கொண்டு சுமார் 30 வருட கால யுத்தத்திற்கே வித்திட்டிருந்தனர். இன்று எமது இளைய சமுதாயம் கல்வியில் விளையாட்டுத் துறைகளில் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது இறுதி நிலைக்குத் தள்ளப்பட்டு மது பாவனைக்கு ஆட்பட்டு பல்வேறு சமூக கலாசார சீர்கேட்டு செயற்பாடுகளுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

யுத்தம் மையமாக நிலைகொண்டிருந்த வடக்கு மாகாணத்தில் அக்காலகட்டமானது யுத்தம் மற்றும் அது சார்ந்த சிந்தனைகள் குறித்தும் அதன் மூலமான பாதிப்புகளிலிருந்து தப்பித்தல் உயிர் பிழைத்தல் வாழுதல் போன்ற குறிப்பிட்ட உயிர் வாழும் நிலை சார்ந்த உணர்வுகள் குறித்தும் குறுகிய நுகர்வு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை மாத்திரம் கொண்டிருந்த ஒரு சூழலில் மது போன்ற பாவனையானது ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒரு நிலை அங்கு காணப்பட்டிருந்தது.

அந்த வகையில் 2009ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால் வடக்கில் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் சுமார்  7 இலட்சத்து 62 ஆயிரம் லீற்றர் பியர் சுமார் 65 இலட்சத்து 98 ஆயிரம் லீற்றர் வெளிநாட்டு வன் மதுபான வகைகள் சுமார் 305 கோடியே 19 இலட்சத்து 60 ஆயிரம் லீற்றர் பனங் கள் என்பன விற்பனை செய்யப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றது.

தற்போதைய நிலையை எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு சுமார் 15 ஆயிரம் லீற்றர் அனைத்து ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணத்திற்கு அடுத்த நிலையில் அதிகமாக மது பானங்கள் விற்பனையாகின்ற மாவட்டமாக வவுனியா காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தில் சுமார் 1 இலட்சத்து 71 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் கடந்த வருடத்தின் ஆரம்ப 10 மாதங்களில் 13 இலட்சத்து 28 ஆயிரத்து 505 லீற்றர் மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இதில் தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்படுகின்ற போத்தல் கள் 3 இலட்சத்து 59 ஆயிரத்து 926 லீற்றரும் அடங்குவதாக தெரிய வருகின்றது.

இந்த இரு மாவட்டங்களிலும் வடக்கின் ஏனைய மாவட்டங்களைவிட அதிகமாக பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் உல்லாசப் பயணிகள் படைத் தரப்பினர் போன்றோரது பிரசன்னங்கள் அதிகம் என்ற போதிலும் விகிதாசார அடிப்படையில் பார்க்கின்றபோது மது பாவனையானது அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தோர் மத்தியிலும் அதிகம் என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மலையகப் பகுதிகளைப் பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களில் நூற்றுக்கு 60 முதல் 70 வீதமானவர்கள் மதுப் பாவனைக்கு உட்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் இந்த மதுப் பாவனை வளர்ச்சிக்கு போத்தலில் அடைக்கப்பட்டுள்ள தென்னங் கள் என்ற போர்வையில் சந்தைக்கு விடப்படுகின்ற மது பானமே ஒரு பிரதான காரணமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு தரவுகளைப் பார்க்கின்றபோது நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 38 இலட்சம் லீற்றர்கள் மேற்படி கள் விற்பனையாகியுள்ளன. அதே போன்று ஹற்றன் பகுதியில் 25 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர்கள் விற்பனையாகியுள்ளன.

இந்த கள்ளின் விலை ஏனைய மதுபான வகைகளின் விலைகளைவிடக் குறைந்துள்ள காரணத்தினாலம் அதிக போதையைத் தருவதாலும் இதனை நாடுகின்றோர் தொகை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. எனினும் இந்தக் கள் உற்பத்திகள் தொடர்பில் முறையாக ஆராய்ந்து பார்க்கப்படுகின்றதா? என்பது குறித்த கேள்விகள் எழுகின்றன. இந்தக் கள்ளினைப் பயன்படுத்துவோர் வயிற்றுழைவு உட்பட பல்வேறு நோய்களுக்கு உடன் ஆட்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

2002ஆம் ஆண்டின் தரவுகளின்படி எமது நாட்டில் தென்னங் கள்ளுக்கென பயன்படுத்தப்பட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கை 84,291 எனத் தெரிய வருகின்றது. அந்த வகையில் இன்றைய அளவில் இத் தொகை பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். இன்று நாடளாவிய ரீதியில் இந்த போத்தல் கள் விற்பனையாகின்றது. மலையகப் பகுதிகளில் மாத்திரம் நாளாந்தம் விற்பனை செய்யப்படுகின்ற கள்ளின் அளவைப் பார்த்தாலே அந்த அதிகரிப்பு எத்தனை மடங்காக இருக்க வேண்டும் என்பது புரிகின்றது. மேற்படி கள் உற்பத்தியாளர்களுக்கு இயற்கையாக கள் வடிப்பதற்கு மாத்திரமே அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இருந்தும் இன்று இந்தக் கள் விற்பனையின் பாரிய அதிகரிப்பினைப் பார்க்கின்றபோது அதன் உற்பத்திக்கு இலங்கையிலிருக்கும் தென்னை மரங்கள் போதுமா? என்ற கேள்வியே எழுகின்றது. எல்லா தென்னை மரங்களும் ஒரே தடவையில் கள் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் இங்கு கவனித்தக்கது.

அத்துடன் மேற்படி கள் உற்பத்தியினைப் பார்க்கின்றபோது உற்பத்தித் திகதி, காலவதியாகும் திகதி அதனுள் அடக்கப்பட்டுள்ள சேர்வைகள் இரசாயனப் பதார்த்தங்களின் உள்ளடக்கம் என்பவை எதுவுமே அற்ற நிலையில் சட்டவிரோத உற்பத்திகளாகவே சந்தைப் படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய ஓர் உற்பத்தியை வெளிப்படையாக விற்பனை செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு என்ன பதில் எனக் கேட்க விரும்புகின்றேன்.

சிலாபம் மற்றும் நாத்தாண்டிய பகுதிகளிலேயே மேற்படி கள் உற்பத்தி நடவடிக்கைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்ற நிலையில் இந்தப் பகுதிகளில் பொலிஸார் மேற்கொள்கின்ற சுற்றி வளைப்புகளின்போது இந்த உற்பத்திக்கென யூரியா அமோனியா ஈஸ்ட் உடல் நலத்திற்குத் தீங்கான அல்லது வலி நிவாரண மருந்து குழிசைகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுகின்ற ஒரு வகையான மருந்து குழிசைகள் என்பன பயன்படுத்தப்பட்டு வருவதையும் அவை கைப்பற்றப்படுவதையும் ஊடகச் செய்திகளின் மூலமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த வகையில் பார்க்கின்றபோது வடக்கில் இயற்கையாகவே பனங் கள்ளினை போத்தலில் அடைப்பதற்கான வருடாந்த உரிமக் கட்டணமும், மேற்படி தீங்கு தரக் கூடிய செயற்கையான கள்ளினை போத்தலில் அடைப்பதற்கான வருடாந்த உரிமக் கட்டணமும் 10 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்படி செயற்கை கள் உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட சாராரின் வியாபாரமாக இருந்து வரும் நிலையில் இயற்கையான பனங் கள் உற்பத்தி என்பது வடக்கே சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதாரத் தொழிலாக இருந்து வருகின்றது.

எனவே போதையற்ற நாடு என்ற வகையிலே எமது நாட்டை முன்னெடுத்துச் செல்லும்போது போதை பழக்கத்திற்கு ஆட்பட்டுள்ள மக்களை அதிலிருந்து படிப்படியாக விடுவிக்கும் பொருட்டு முதலில் வன் மதுபானங்களிலிருந்து மென் மதுபானங்கள் நோக்கி அவர்களைக் கொண்டு வர வேண்டும். இந்த அணுகுமுறையானது மேற்கு ஐரோப்பா அவுஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளில் வெற்றியளித்துள்ளன. அதாவது மென் ரக மதுபான வகைகளின் உற்பத்திக்கு வரிச்சலுகைகள் வழங்கி ஊக்குவித்துள்ளதன் ஊடாக வன் மதுபான வகைகளின் பாவனையிலிருந்து மென் மதுபான வகைகளின் பாவனைக்கு மக்களின் குடிப்பழக்கத்தை மாற்றுவதில் அந்த நாடுகள் வெற்றி கண்டுள்ளன. இதனூடாக அம் மக்களைப் படிப்படியாக மதுப் பாவனையிலிருந்து விடுவிக்க முடியும்.

எமது நாட்டைப் பொறுத்த வரையில் கடந்த 5 வருடங்களில் மென் மதுபானங்களின் உற்பத்தி 7.5 வீதமாக அதிகரித்துள்ள நிலையில் வன் மதுபானங்களின் உற்பத்தி 20 வீதமாக அதிகரித்துள்ள நிலையே காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

அந்த வகையில் மேற்படி செயற்கைத் தனமான கள் உற்பத்தி முயற்சிகளைத் தடை செய்வதற்கும் இயற்கையான கள் உற்பத்தி என்ற வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பனங் கள் உற்பத்தியை ஊக்குவித்து அதனை பரவலாக்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக உடலுக்கு அதீத தீங்கு விளைவிக்கும் விலை குறைந்த மது பானங்களிலிருந்து மது பாவனையாளர்களை பாதுகாப்பதற்கும் சட்டவிரோத மது உற்பத்திகளை மட்டுப்படுத்துவதற்கும் படிப்படியாக வன் மதுபான பாவைனையை குறைப்பதற்கும் அதனாடாக மது பாவனையை இயன்றளவு இல்லாதொழிப்பதற்கும் இயலுமாகும் என நினைக்கின்றேன்.

எமது நாட்டிலே மது பாவனையை ஒழிப்பது தொடர்பில் பல்வேறு முயற்சிகள் அரச மட்டத்திலும் தனியார் நிறுவன ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இன்றைய நிலையில் மது பாவனையில் தென் ஆசியாவில் முதலாவது இடத்திற்கு எமது நாடு வந்திருக்கின்றது. எம்மைவிட சனத்தொகையில் சுமார் 60 மடங்கு அதிகமுள்ள இந்தியா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

போதையற்ற நாடாக எமது நாட்டை மாற்றப் போவதாக கூறப்படுகின்ற போதிலும் 2017ஆம் ஆண்டுக்கான எமது வரவு – செலவுத் திட்டத்தில் கலால் வரி சேர்ப்பின் மூலமாக திறைசேரி சுமார் 575 பில்லியன் ரூபாவை எதிர்பார்க்கின்றது.

எனவே சட்ட ரீதியிலான மது வருவாயினை தொடர்ந்தும் அதிகரித்துக் கொள்ளும் நிலைமைகளே காணப்படுகின்றன. பொதுவானதொரு நடைமுறைச் சாத்தியமான மதுக் கொள்கை எமது நாட்டில் இல்லை என்றே கூற வேண்டும்.  அதாவது நீண்;ட காலமாக விவாதிக்கப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் ஒன்றிணைந்த சிக்கலானதொரு கொள்கைப் பரப்பாகவே இந்த மதுக் கொள்கை இருந்து வருகின்றது.

பல்வேறு வழிமுறைகளின் ஊடான வரி விதிப்புகளின் மூலமாக ஒரு போதும் மது பாவனையைக் கட்டப்படுத்த முடியாது என்பதை எமது நாடு இன்று தென் ஆசியாவில் முதலாவது இடத்திற்கு மது பாவனையில் முன்னேறியுள்ளதிலிருந்தே தெரிய வருகின்றது.

அதீத வரி விதிப்புகள் என்பது மதுபான பானைக்கு உட்பட்டுள்ளவர்களது குடும்பங்களின் வறுமையை மேலும் அதிகரிப்பதற்கும் சட்டவிரோதமான மது உற்பத்திகள் அதிகரிப்பதற்குமே துணை போகின்றது.

அந்த வகையில் எமது நாட்டிலே 65 வீதமான மது பானங்கள் சட்டவிரோதமானவை என்றே தெரிய வருகின்றது. அதே போன்று நாட்டில் சுமார் 4000 ஆயிரம் சட்டரீதியிலான மது விற்பனையாளர்கள் இருக்கின்ற நிலையில் சுமார் 200000ற்கும் அதிகமான சட்டவிரோதமான மது விற்பனையாளர்கள் இருப்பதாக சுயாதீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை தொடர்பில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறான சட்டவிரோதமான மது விற்பனைகள் உற்பத்திகள் என்பன தடை செய்யப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் வடக்கில் கிளிநொச்சி மாவட்டம் உட்பட பல பகுதிகளில் கசிப்பு உற்பத்தி மிக அதிகரித்த நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த உற்பத்திகளுக்கென உடலுக்கு பெரிதும் கேடு விளைவிக்கக்கூடிய பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன என்றும் கூறப்படுகின்றது.

எனவே இவ்வாறான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு வரி விதிப்புகள் மட்டுமே நோக்கம் என்ற வகையில் செயற்படாமலும் வரி விதிப்பே மது பானத்தை ஒழிக்கும் ஒரே வழி என தொடர்ந்தும் நடைமுறைச் சாத்தியமற்ற கதைகளைக் கூறிக் கொண்டிருக்காமலும் அதன் மூலமாக சட்டவிரோத மது உற்பத்திகளை மேலும் அபிவிருத்தி செய்யாமலும் நான் மேலே கூறியதைப் போன்று இயற்கையான மென் மது பானங்களின் உற்பத்திகளை குறுகிய காலத்திற்கு ஊக்குவிப்பதன் ஊடாக படிப்படியாக அழிவுகள் கூடிய வன் மதுபான பாவைனைகளிலிருந்து எமது மக்களை மீட்பதற்கும் அதனூடாக படிப்படியாக மது பாவனையிலிருந்து எமது மக்களை முற்றுமுழுதாக விடுவிப்பதற்கும்  நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: