போதைப்பொருள் கடத்தலை கடற்படையால் கட்டுப்படுத்த முடியாதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

வடக்கு கிழக்கின் கடற்கரையோரங்களை மூலதனமாகக் கொண்டு வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்கின்றீர்கள். அந்த ஒப்பந்தங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவையா? அதனால் இலங்கைக்கு எவ்விதமான நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக பேசுவதற்கு முன்னர், இலங்கையை பெரும் போதைப்பொருள் விநியோக மையமாக மாற்றிக் கொண்டிருக்கும் போதைப் பொருள் விநியோகப் பாதையாக காணப்படும் கடல் பிரதேசத்தை முறையாக கண்காணிக்க இந்த அரசாங்கத்தால் ஏன் முடியாமல் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும், சிங்கப்பூர் குடியரசிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய சபை ஒத்திவைப்பின் போதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
யுத்தம் நடைபெற்ற காலத்தில் கடல் வழியாக ஆயுதக் கப்பல்கள் நுழைந்துவிடாதிருப்பதிலும், கடல் மார்க்கமாக ஆயுத தாரிகளின் போக்குவரத்து சாத்தியமாகிவிடக் கூடாது என்பதிலும் திட்டமிட்டு செயலாற்றிய இலங்கை கடற்படையினரால் இப்போது போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அவ்விதமாக ஏன் செயற்படமுடியவில்லை.
கடற்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமானால், கடல் மார்க்கமாக இலங்கைக்குள் கொண்டுவரப்படும் போதைப்பொருள் விநியோகத்தையும், எமது கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அத்துமீறிய மீன்பிடியாளர்களையும் தடுக்கலாம்.
ஆகாய விமானம் மூலமாக நடைபெறும் போதைப் பொருள் கடத்தலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியுமாக இருக்கின்றபோதும், கடல் மார்க்கமாகவே பெருமளவான போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கவும், அதன் பாதிப்புக்குள்ளாகும் இலங்கையர்களை பாதுகாக்கவும், போர்க்காலத்தில் செயற்பட்டதைப்போன்று விN~ட நடவடிக்கைகளை எடுத்து எமது கடற்பிராந்தியத்தை பாதுகாக்க இலங்கை கடற்படை ஏன் செயற்படுவதில்லை.
எமது கரையோரப்பகுதிகள் போதைப்பொருள் கடத்தல் காரர்களின் இலகுவான போக்குவரத்து மார்க்கமாக மாறியிருக்கின்ற தற்போதைய ஆபத்தான சூழலை கவனத்திற் கொள்ளாமல், வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதற்கு ஏன் அவசரப்படுகின்றோம் என்பதிலும், இந்த ஒப்பந்தங்கள் ஊடாக அந்தக் கடற்பிரதேசங்களையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்துவரும் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு கிடைக்கப் போகும் பயன்கள் எவை என்பதிலும் பல கேள்விகளுக்கு விடைகாண வேண்டியிருக்கின்றது.
அதேநேரம் போதைப் பொருட்கள் விநியோகம், பாவனையால் ஏற்படக்கூடிய பாதிப்புககள் தொர்பாகவும் நாட்டு மக்கள் போதிய தெளிவு இல்லாதிருக்கின்றார்கள் ஆகவே போதைப் பொருட்களின் வகைகள், அதன் தன்மைகள், அதிலிருந்து எவ்வாறு ஒதுங்கியிருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், அது தொடர்பான குற்றம் எவை என்பது தொடர்பாகவும் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் விN~ட ஏற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த செயல்திட்டத்திற்கு அரசாங்கம் மட்டுமல்லது, பொதுமக்களும், மத நிறுவனத் தலைவர்களும், தொண்டு அமைப்புக்களும், அரசியல் தலைமைகளும் எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்பதையும் ஆராய்ந்து விழிப்புனர்வூட்டும் பொறுத்தமான திட்டம் தயாரிக்கப்படுவது நன்மையாக அமையும் என்பதை முதலில் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
Related posts:
|
|