பொன்னாலை பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரப்படும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, June 10th, 2019

பொன்னாலை பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து தேவைப்பாடுகளுக்கும் முடியுமானவரை முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பொன்னாலை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த பகுதி மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

பொன்னாலை பாபுஜி ஆரம்ப பிள்ளைகள் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது குறித்த பகுதி மக்கள் தமது பிரதேசத்தின் மாதர் அபிவிருத்தி சங்கத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தி அதனூடாக பெண்களது சுயதொழில் வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தருமாறும் தமது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக முன்பள்ளி அபிவிருத்தியையும் அதன் பாதுகாப்பிற்காக சுற்று வேலி அமைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன் குறித்த பிரதேச இளைஞர்கள் தமது விளையாட்டு மைதானத்தை புனரமைப்பதற்கான உதவிகளை பெற்றுத்தருமாறு கோரியதுடன் தமது பிரதேசத்தின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை செய்து தருமாறும் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரியிருந்தனர்.

மக்களது தேவைப்பாடுகளை கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னுரிமை அடிப்படையில் காலக்கிரமத்தில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் 1987 களில் உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக எமது அபிலாஷைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று நாம் ஏற்றுக்கொண்டது போல இதர தமிழ் தரப்பினர் ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று எமது இனம் பல வழிகளிலும் முன்னேற்றங்கண்டிருக்கும். ஆனால் இதர தமிழ்த் தரப்பினர் தத்தமது அரசியல் இலாபங்களுக்காக எமது மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் சீரழித்துவிட்டன. இதனால் எமது மக்கள் இன்றுவரை எந்தவொரு நிலையான தேவைப்பாடுகளை கூட பெறமுடியாதிருக்கின்றனர்.

யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மக்களுக்காக கிடைத்த அருமையான வாய்ப்பான மாகாண சபையைக் கூட தமது ஆளுமையீனத்தால் சீரழித்து ஆட்சி முடியும் வரை கதிரையில் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் தமது சுயநலன்களை தவிர வேறெதனையும் கண்டது கிடையாது.

இந்த அருமையான மாகாணசபை எமது கரங்களுக்கு கிடைத்திருந்தால் இன்று நீங்கள் இவ்வாறான அடிப்படை தேவைகளுக்காக ஏங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. அதை நாம் என்றோ செய்து காட்டியிருப்போம். அதுமட்டுமல்லாது தமிழ் மக்களுக்கான உரிமைகளை கூட வென்றெடுத்துக் காட்டியிருப்போம் என்றார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts: