புனித நகரமாகின்றது திருக்கோணேஸ்வரர் ஆலய பிரதேசம் – டக்ளஸ் தேவானந்தாவின் கேள்விக்கு பிரதமர் பதில்

Thursday, March 9th, 2017

திருக்கோணேஸ்வர ஆலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியினை புனித பிரதேச வலயமாக பிரகடனம் செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராயும் நடவடிக்கைகள் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கோகர்ண என அழைக்கப்பட்ட திருகோணமலை பகுதியில் அக்காலத்தில் வாணிப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதோடு வெளிநாட்டு தொடர்புகளுடன் முக்கிய பகுதியாக வரலாற்றுக் காலப்பகுதியில் விளங்கியுள்ளது. இவ்வாறானதொரு வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் விளங்குகின்றது.

போர்த்துக்கேய ஆட்சியில் பாதிப்புக்குள்ளாகிய இந்த கோயில் தற்போது முக்கிய வரலாற்று அடையாளமாக காணப்படுகிறது. இந்த கோயில் மற்றும் அதனை அண்டிய பகுதியினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் பொறுப்பினை இந்துமத அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கியுள்ளோம். அது தொடர்பிலான ஆராய்வினை இந்துமத அலுவல்கள் அமைச்சு முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு அண்மையில் மூன்று நாள் விஜயம் ஒன்றை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மஹாசிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குறித்த ஆலயத்தின் நிர்வாகத்தினர் ஆலய அபிவிருத்தி மற்றும் ஆலய சூழலை புனித பகுதியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு தருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் நாடாளுமன்றில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா அவர்களது கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க திருக்கோணேஸ்வரர் ஆலய பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_20170224_230002

DSCF0556

Related posts:


யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
நீதிமன்றங்களில் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கை வேண்டும்!
திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் - அமைச்சர் டக்ளஸின் தலையீட்டால் இடைநிறுத்தம்!