புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, January 11th, 2019

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் அனைத்தையும் புதிய அரசியல் யாப்பு பூரணமாக ஏற்றுக்கொள்ளுமேயானால் நாம் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் ஒற்றையாட்சியா?  சமஸ்டியா? என்ற வாதச்சண்டைக்குள் தீர்வு முயற்சிகள் முடங்கிப்போய் விட நாம் அனுமதிக்க முடியாது. தீர்வின் பெயர் எமக்கு பிரதானம் அல்ல. அரசியல் அதிகாரங்களே எமது மக்களின் அபிலாசைகள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசியலமைப்பு வரைபு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அரசியல் அதிகாரங்களே எமது மக்களின் அபிலாசைகள். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டு. பகிரப்பட்ட அதிகாரங்கள் நிலைபேறானதாகவும் மீளப்பறிக்கப்பட முடியாதவையாகவும் இருத்தல் வேண்டும். இறைமையுள்ள மாகாணங்களை கொண்ட இறமையுள்ள நாடாக இருத்தல் வேண்டும். மதச்சார்பற்ற, இரு மொழிக்கொள்கையுள்ள நாடாகவும் இருத்தல் வேண்டும்.

இதே வேளை, தமிழ் பேசும் மக்களுக்கு விசேட அதிகாரங்களை கொண்ட அரசியல் ஏற்பாடு உள்ளடக்கப்பட வேண்டும். இவைகள் மட்டும் இருந்தால் போதும். இத்தைகைய தெரிவிற்கு எந்தப்பெயரை சூட்டினாலும் நாம் ஏற்றுக்கொள்வோம்.

ஒற்றையாட்சி என்றால் தமிழ் மக்களின் பார்வையில் சிங்களப்பிசாசு! சமஸ்டி என்றால் சிங்கள மக்களின் பார்வையில் தமிழ்ப்பிசாசு!! இரண்டுமே பிசாசுகள் அல்ல என்பதை தெளிவூட்ட விரும்புகிறேன்.

பெடரல் பார்ட்டி என்று சிங்கள மக்கள் மத்தியில் சமஸ்டிக்கட்சியாகவும், தமிழரசுக் கட்சி என்று தமிழர்கள் மத்தியில்  தனியரசு கட்சியாகவும் இருதரப்பையும் ஏமாற்றியது போல் இரட்டை வேடம் இனியும் வேண்டாம்.

தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு முகமும், சிங்கள மக்களுக்கு இன்னொரு முகமும் காட்டும் மாய வித்தைகளை அரசியல் தீர்வு விடயத்திலும் காட்டுவதை அனுமதிக்க முடியாது. அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும்,  அதனை மீளமைப்பதற்குமான அதிகாரங்கள் மத்திய அரசிற்கே உண்டு என இங்கு கொண்டுவரப்படும்  வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசினால் குறைக்கவும் முடியும், பறிக்கவும் முடியும், மாகாண சபை முறைமையை அகற்றிவிடவும் முடியும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. ஆகவே, இது  ஒருமித்த  நாட்டிற்குரிய  அதிகாரங்கள் அல்ல என்றும் மாறாக, ஒற்றையாட்சிக்குரிய பண்புகளையே கொண்டிருக்கிறது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பாலை, வெள்ளிக்கிண்ணத்தில் குடித்தாலும், பொற்கிண்ணத்தில் குடித்தாலும், பால் வெள்ளியாகவோ, பொன்னாகவோ மாறிவிடப்போவதில்லை. பால் என்றும் பால்தான். அதே போல் ஒற்றையாட்சிக்குரிய  அதிகாரங்களை  கொண்டிருக்கும் அரசியல் யாப்பிற்கு ஒருமித்த நாடு என்று பெயர் சூட்டி விட்டால் ஒற்றையாட்சி  சமஸ்டியாக மாறி விடாது என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இந்த வரைபில் என்னால் காணக்கூடியதாகவுள்ள சில விடயங்கள் தொடர்பில் சில யோசனைகளை கால அவகாசம் கருதி, சுருக்கமாக  முன் வைக்க விரும்புகின்றேன்.

Related posts:


சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் மறைவு குறித்த துக்கத்தில் இருக்கும் சிங்கப்பூர் மக்...
அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்க...
வாள் வெட்டும், கல்வியில் பின்னடைவும் எமது அடையாளமல்ல – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!