பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, June 21st, 2018

கடந்த ஐந்து வருடகாலமாக வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்று மக்கள் நலன் சார்ந்து ஆக்கபூர்வமாக செயற்படாத முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவடையும் வடக்கு மாகாணசபையின் பதவிக்காலத்தை மேலும் நீடித்து தமது ஆளுமைக்கு கீழ் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது வேடிக்கையானதாகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் 1990 சுவசெரிய மன்றத்தினை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதனோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏறப்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அவர் ஒரு முன்னாள் நீதியரசர் என்றபோதும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அறிந்துகொள்ளாமல் பதவிக்காலம் முடிந்த பின்னரும் கால நீடிப்புச் செய்து தமக்கு முதலமைச்சராக பதவி நீடிப்புச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருப்பது வடக்கு மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மாகாணசபைகளில் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததும், அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்கும்வரை அது மாகாணத்தின் ஆளுனரின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வகிக்கப்படும் என்பது நியதியாகும்.

இந்திலையில் பதவி ஆசையும் அந்தப் பதவியின் சுகபோகங்களுக்குள் இருந்து கொண்டு சுயநல அரசியலில் ஈடுபடுவதற்கு வசதியாகவுமே பதவிக் காலம் நிறைவுக்குப் பிறகும் தனக்கு பதவி நீடிப்புத் தேவை என்று கேட்கின்றாரே தவிர யுத்த வடுக்கலோடும் பொருளாதார வறுமையோடும் வட மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்கு கடந்த ஐந்து வருடங்களில் அர்த்தபூர்வமாக எதையும் செய்யாத முதலமைச்சரும் அவரது சகாக்களும் எதிர்காலத்தில் எதையும் செய்வார்கள் என்று வட மாகாண மக்கள் நம்பவில்லை.

எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பாக நான் விடுக்கும் வேண்டுகோளானது வடக்கு மாகாண சபைக்கான பதவிக்காலம் நிறைவடைந்ததும் கால தாமதமின்றி உடனடியாக வடக்கு மாகாணசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் என்பதாகும்.

புதிய தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு கால தாமதம் எடுக்குமாக இருந்தால்பழைய தேர்தல் முறையில் தேவையான சிறு திருத்தங்களை செய்து கொண்டு உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும். கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு மாகாணசபையினால் பெற்றுக்கொள்ள வேண்டிய பலாபலன்களை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை. அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்து மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இருக்கும் ஜனநாயக விருப்பத்தை நிறைவேற்ற உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

1549537_198225150384809_765951259_n

Related posts:


தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவா...
கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச மிதிவெடி விளிப்புனர்வு விசேட நிகழ்வு - அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க...
தேசிய தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் முறையான பொறிமுறை அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந...