நெல் அறுவடைக்கான இயந்திரங்கள் தொடர்பிலான டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றது விவசாய அமைச்சு!

Thursday, March 22nd, 2018

நெல் அறுவடைக்காக பயன்படுத்தப்படுகின்ற இயந்திரங்களைக் கமநல சேவைகள் அமைப்புகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க முடியுமா என விவசாய அமைச்சரிடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ள்ஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போதே   விவசாய அமைச்சரிடம் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பூநகரி கமநல சேவைகள் திணைக்களத்தில் மட்டுமல்லாது, வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கமநல சேவைகள் திணைக்களங்களிலும் பழுதடைந்து காணப்படுகின்ற உழவு இயந்திரங்களைத் திருத்தி, அவற்றையும்,  பாவனைக்கு பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கின்ற உழவு இயந்திரங்களையும் குத்தகை அடிப்படையில் விவசாய மக்களின் பாவனைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

அத்துடன் யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் நெல் அறுவடைகளின்போது பயன்படுத்தப்படக்கூடிய இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால், இவை வெளி மாவட்டங்களில் இருந்தே குத்தகைக்கு அமர்த்தப்படுகின்றன. இதனால், உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும் நிலையும், வீண் சிரமங்களும் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்கும் வகையில் விவசாய மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கென அதற்குரிய இயந்திரங்களை யாழ் மாட்ட கம நல சேவைகள் திணைக்களத்திற்கு வழங்க முடியுமா? என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிஹார பதிலளிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் நெல் அறுவடைக்கான இயந்திரங்களின் தேவைப்பாடு குறித்து கோரினால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கமநல சேவைகள் மத்திய நிலையங்களுக்கு பெயர்ப் பட்டியல் கிடைக்கப்பெற்றதால், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செயற்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பானவர்கள்: மக்கள் முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டியது எம்ம...
வளம் மிக்க முல்லை மண்ணை கட்டியெழுப்ப எம்முடன் கைகோருங்கள்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொட...