நாட்டில் தெரு நாய்களைவிட குறைந்த நிலைக்கு புத்தாக்க முயற்சிகள் தள்ளப்பட்டுள்ளன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, March 19th, 2019

புத்தாக்க முயற்சிகள் சார்ந்த அதிகளவிலான ஊக்குவிப்புகள் தேவை என்பதை உணர்தல் வேண்டும். ஆனால், இவ்விடயம் இன்னமும் இங்கு உணரப்படவில்லை என்றே இந்த வரவு – செலவுத் திட்டமும் எடுத்துக் காட்டுகின்றது. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படுகின்ற நிலையில், புத்தாக்க நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கவென 50 மில்லியன் ரூபாவே முன்மொழியப்பட்டுள்ளது. அந்த வகையில், தெரு நாய்களைவிட குறைந்த நிலைக்கு புத்தாக்க முயற்சிகள் தள்ளப்பட்டுள்ளன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்ட விவாதத்தில் பொது தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்-

இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இறுதியாக பொது தொழில் முயற்சி கௌரவ அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களிடம் ஒரு கோரிக்கையினை முன்வைக்க விரும்புகின்றேன்.

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ் வருகின்றது என நினைக்கின்றேன். இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றியிருந்த 74 நிரந்தரப் பணியாளர்கள் 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தம் காரணமாக வேறு மாகாணங்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அங்கு தொழிலுக்குச் செல்ல இயலாத சூழல் காரணத்தால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் சுமார் 28 பேர் தற்போது உயிருடன் இல்லை. அதிலிருந்து இதுகாலவரையில் மிகவும் சிரமங்களுக்கிடையிலேயே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு எவ்விதமான ஊதியங்களோ, நட்டஈடுகளோ இதுவரையில் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர். எனவே, இவ்விடயம் தொடர்பில் மனிதாபிமான முறையில் பரீட்சித்துப் பார்த்து, அம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய வகையில் கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்.

Related posts: