தேசிய நல்லிணக்கம் உணர்வுபூர்வமாக உருவாக்கம் பெறுவதற்கு படையினர் வசமுள்ள மக்களின் காணி நிலங்கள்  மீள ஒப்படைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 9th, 2017

எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்ப வேண்டுமானால் வெறுமனே அதற்கென அலுவலகங்களை அமைத்து, அதிகாரிகளை நியமித்து, நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, பிரச்சாரங்களை மாத்திரம் முன்னெடுத்து வருவதாலும், ஆளுக்காள் தேசிய நல்லிணக்கம் குறித்து கதைத்துக் கொண்டிருப்பதாலும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கம் என்பது உணர்வுப்பூர்வமாக உருவாக்கம் பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இந்தச் சபையிலே தெரிவித்து வருகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் காணி (பாரதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

இது தோடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் மிகவும் இக்கட்டான – தேசிய நல்லிணக்கத்திற்கு பலத்த எதிர்ப்புகளைக் கொண்டிருந்த ஒரு சூழலில் அதனை ஒரு கொள்கையாக எமது நாட்டில் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் துணிந்து முன்னெடுத்தவர்கள் என்ற வகையில், எமக்கிருக்கின்ற அனுபவங்களைக் கொண்டே இதை நான் கூறி வருகின்றேன். எனவே, எமது மக்களது காணி, நிலங்களை விடுவிப்பதிலும்கூட தேசிய நல்லிணக்கத்திற்கான வித்து உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பதை தேசிய நல்லிணக்கம் தொடர்பில் முயற்சிக்கின்ற அனைத்து தரப்பினரும் உணர முன்வர வேண்டும்.

எனவே, படையினர் வசமுள்ள எமது மக்களின் காணி, நிலங்கள், கட்டிடங்கள் என்பன எமது மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Parliament-of-srilanka-1024x683 copy

Related posts: