தெற்கு மக்களின் மனிதநேயம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெரிதும் உதவும் – டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை!
Tuesday, January 1st, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களதும் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களினதும் ஏற்பாட்டில் தென்னிலங்கை மக்களிடமிருந்து ஒரு தேசிய நல்லிணக்கம் கருதி முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்து வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பப்பட்டிருக்கின்றது. இது தேசிய நல்லிணக்கத்திற்கு மெலும் வலுச்சேர்க்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான உணவுப் பொருட்களை அந்தந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களிடம் வழங்கி வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான ஒரு நல்லிணக்க முயற்சியாக ஜனாதிபதியின் தலைமையில் மாத்தறையிலிருந்து மாங்குளம் கிளிநொச்சிவரையான தென்னிலங்கை மக்கள் வடக்கில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களள் மீதான தமது அக்கறையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் இந்த உணவுப் பொருட்களை திரட்டி அனுப்பியிருக்கின்றனர்.
அந்த வகையில் ஜானாதிபதி அவர்களுக்கும் முன்னாள் ஆளுநர் அவர்களுக்கும் நான் இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் சார்பாக நன்றி சொல்ல விரும்புகின்றேன் என தெரிவித்தார்.
இதனிடையே வடக்கு மாகாண ஆளுநர் மாற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று அல்லது நாளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் இதன்போது குறித்த விடயத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன்போது மற்றுமொரு ஊடகவியலாளர் வடபகுதி மக்களின் மீதான அக்கறை மற்றும் கைதிகள் விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் தற்போது பேச்சுக்கள் நடைபெறுவது குறைவடைந்திருப்பதாக தெரிகிறது. உண்மையிலேயே அதிகாரம் நிறைந்த பொறுப்பிலிருப்பவர் ஜனாதிபதி. அவர் அந்த முயற்சியில் ஈடுபட முயற்சிகள் ஏதாவது நடக்கின்றதா என எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த செயலாளர் நாயகம் அவர்கள் – அரசியல் கைதிகள் மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது. நாங்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் போது இருந்த பிரச்சினைகள் வேறு. அதனுடைய விளைவினால் ஏற்பட்ட பிரச்சினைகள் என்று பல பிரச்சினைகள் இருக்கிறது.
இதை தமிழ் மக்களினுடைய தலைமைகள் ஒரு பொறுப்புணர்வுடன் அதற்கேற்ற வகையில் அணுகுவதனூடாகத்தான் தீர்வு காண முடியும். இதை என்னுடைய அனுபவத்திலிருந்து தான் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன் என்றார்.
இந்த நிகழ்வின்போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலோசகர் தவராசா, கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜா, யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


