தீரா பிரச்சினைகளோடு அரச மருத்துவத் துறை இயங்குகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, August 22nd, 2019

அண்மைய காலமாக சுகாதார சேவைகள் தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்டு வருகின்ற ஒரு சந்தர்ப்பத்தில், அண்மையில் சுகாதார அமைச்சர் வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதே நேரம், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் சுமார் 25க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறைகள் நிலவுவதாகவும் செய்திகள் தெரிவித்திருந்தன.

இத்தகைய விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற நிலையில், பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான வைத்தியர் சின்னையா சிவரூபன், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் கடந்த ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நாட்டில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை என்பது நாடளாவிய ரீதியில் நிலவிவருகின்ற போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் போன்ற தூரப் பகுதிகளில் – அங்கிருக்கின்ற கஸ்ட – அதிகஸ்ட பகுதிகளில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை என்பது மிகவும் அதிகமாகக் காணப்பட்டு வருகின்றது.

நிலைமை இவ்வாறு இருக்கின்றபோது, இந்த நாட்டில் வைத்தியர்களுக்கு எதிரான கெடுபிடிகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் குறைவில்லாத நிலையும் காணப்படுகின்றது.

இத்தகையதொரு நிலையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் பெருமளவில் குறையாக இருப்பதாகவும், வைத்தியக் கல்விக்கு ஆகக் குறைந்த தரத்தை அறிவிக்காமையினாலும், வைத்தியர்களுக்கான நடவடிக்கைக் குறிப்பை மாற்றி அமைத்தமைக்காகவும், விஞ்ஞானப் பாடங்களில் உயர்தரம் கூட சித்தியடையாதவர்களுக்கு மருத்துவ நியமனங்களை வழங்குவதற்கு சட்டவிரோத முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்பட்டே இந்தப் பணிப் பகிஸ்கரிப்பினை இவர்கள் மேற்கொள்ள உள்ளனர் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

இதை எல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது, அரச மருத்துவத் துறையானது ஒரு பிரச்சினைக்குரிய துறையாகவே தொடர்ந்தும் வளர்த்தெடுக்கப்பட்டு வருவதாகவே எமது மக்கள் மத்தியில் ஒருவிதமான கருத்து ஏற்பட்டிருப்பதைத் தவிர்க்க முடியாதுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...
ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விஷேட சந்திப்பு!
வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...
மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது - டக்ள...
யாழ்ப்பாணம் - புத்தளம் மீனவர் கூட்டுறவுசங்கங்களின் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விசேட திட்ட...