உயிரிழந்தவர்களை நினைவு கூர இடையூறு ஏற்படுத்தக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, November 21st, 2017

உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் வசதியாக ஒரு பொது நினைவுத் தூபி அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தை குறித்தொதுக்குவதற்கும் அரசு தெரிவித்திருந்த சாதகமான பதிலுக்கு எனது நன்றியினை இந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவித்துக் கொள்வதுடன்,

அந்த ஏற்பாடுகளை பொருத்தமான ஓர் இடத்தில் மேற்கொள்ளும் வரையில், கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவுகூருவதற்கு எவ்விதமான தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையையும் மனிதாபிமான ரீதியில் இந்த இடத்தில் முன்வைக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 18.11.2017ஆந் திகதி, பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

எமது நாட்டில் அந்தந்த மாவட்டங்களின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்ப, தேசிய பாதுகாப்பின் பூகோள அவசியம் கருதி படையினரும் சட்டம் ஒழுங்கினை நிலைப்படுத்த பொலிஸாரும் நிலை கொள்ளச் செய்யப்படுதல் வேண்டும்.

அத்தகையதொரு நிலைப்பாடே எமது மக்கள் மத்தியில் ‘நாம் இலங்கையர்கள்’ என்ற மனப்பான்மையை வளர்ப்பதற்கு ஏதுவாகும். இந்த மனப்பான்மையானது முப்படைகளிடத்தேயும், பொலிஸாரிடத்தேயும் ஏற்படுதல் அவசியமாகும்.

எமது நாட்டின் அனைத்து இன மக்களையும் ‘இலங்கையர்கள்’ என மதிக்கின்ற எண்ணக்கரு முப்படையினருக்கு அவசியமாகும். நீண்டகால யுத்தமானது முப்படைகள் மத்தியில் இந்த எண்ணக்கருவை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருந்திருக்கலாம்.

எனவே, அரசியல் தலைமைத்துவமானது இந்த எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதுடன், இந்த எண்ணக்கருவை முப்படைகளுக்கும் வழங்கி, அதனை தீவிரமாக மேலோங்கச் செய்வதற்கு முன்வர வேண்டும்.

மேலும், முப்படைகளில் பல்லினத் தன்மையற்ற முறைமை களையப்பட வேண்டியதும் அவசிமாகும். இவ்வாறு வளர்த்தெடுக்கப்படுகின்ற சூழலே இந்த நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கு பலமான அத்திவாரத்தை இடும் என்பதில் சந்தேகமில்லை.

அண்மையில், இலங்கை கடற்படையின் 21வது தளபதியாக அத்மிரால் ட்ராவிஸ் சின்னையா அவர்கள் நியமிக்கப்பட்டதானது, தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய எமது நாட்டின் பயணத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக இந்த நாட்டின் பெரும்பாலான மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

முப்படையினர் மத்தியிலும் பெரும்பாலானவர்கள் இதற்கு மதிப்பளித்திருந்தனர் என்றே தெரிய வந்திருந்தது. எனினும், அவர் மிகவும் குறுகிய காலத்தில் ஓய்வுபெறச் செய்யப்பட்டதும், ஓய்வுபெறச் செய்யப்பட்ட விதமும் மிகவும் வேதனை தருகின்ற விடயமாகவே மாறிவிட்டது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்திலே பதிவு செய்ய விரும்புகின்றேன்.

மேலும், ஏற்கனவே நான் இந்தச் சபையின் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, கடந்தகால யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கும், மதக் கிரியைகளை மேற்கொள்வதற்கும்,

உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் வசதியாக ஒரு பொது நினைவுத் தூபி அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தை குறித்தொதுக்குவதற்கும் அரசு தெரிவித்திருந்த சாதகமான பதிலுக்கு எனது நன்றியினை இந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவித்துக் கொள்வதுடன்,

அந்த ஏற்பாடுகளை பொருத்தமான ஓர் இடத்தில் மேற்கொள்ளும் வரையில், கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவுகூருவதற்கு எவ்விதமான தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையையும் மனிதாபிமான ரீதியில் இந்த இடத்தில் முன்வைக்கின்றேன்.

அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதில் தென்பகுதியில் இன்று காணப்படுகின்ற நடைமுறைகளைப்போல், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் வழிவிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

Related posts:


நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டு...
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டம் 2021 - கிளிநொச்சி மாவட்ட பயனாளர்களுக்கு அம...