திருகோணமலை மக்களது காணி உரிமங்கள் தொடர்பான பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் – சபையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, May 25th, 2017
திருகோணமலை மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் காணி உரிமங்கள் குறித்த பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (25) நாடாளுமன்றத்தில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாரத்ன அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், திருகோணமலை, பட்டினமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ், புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்டதாக  செல்வநாயகபுரம், தேவாநகர், ஆனந்தபுரி, நித்தியபுரி ஆகிய நான்கு கிராமங்கள் அமைந்துள்ளன. மேற்படி கிராமங்களில் சுமார் 2200 குடும்பங்கள் வசித்து வருவதுடன், இப்பகுதியானது சுமார் 800 ஏக்கர் நிலப்பகுதியைக் கொண்டதாகவுள்ளது. சாம்பல்தீவு, சல்லி, நிலவெளி, குச்சவெளி,  கும்புறுப்பிட்டி, திரியாய், மூதூர் போன்ற பகுதிகளிலிருந்து யுத்த அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் மேற்படி கிராமங்களில் 1994ஆம் ஆண்டு மீள்குடியேற்றஞ் செய்யப்பட்டனர்.
மேற்படி மக்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடக் கூலித் தொழிலையே தங்களது ஜீவனோபாயமாகக் கொண்ட நிலையில், இவர்கள் தாங்கள் குடியிருக்கின்ற மேற்படி காணிகளுக்கான உரிமம் கோரி தொடர்ந்தும் உரிய தரப்பினர் பலரிடம் கோரிக்கை விடுத்தும், போராட்டங்களை நடத்தியும், இதுவரையில் தாங்கள் வாழும் காணிகளுக்கான உரிமங்களைப் பெறாத நிலையிலேயே வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இம்மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக 2009ஆம் ஆண்டு முகட்டு வரி, மின்சார கட்டணப்பட்டியல், நீர் அறவிடும் கட்டணப் பட்டியல் என்பன இம் மக்களது சொந்த பெயர்களில் வழங்கப்ட்டு வருவதாகத் தெரிவிக்கும் இம் மக்கள், காணி உரிமம் இன்மை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலை பிரதே செயலாளர் பிரிவிற்குட்பட்ட லிங்கநகர் கிராம சேவையாளர் பிரிவில் 70 குடும்பங்கள், மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நல்லூர் கிராம சேவையாளர் பிரிவில் 327 குடும்பங்கள், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 2000 குடும்பங்கள் என மேற்படி காணி உரிமம் இன்மை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினை தொடர்பில் அவதானங்களைச் செலுத்தி, இம் மக்களுக்கான காணி உரிமங்களை வழங்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுத்து உதவுமாறும், இம் மக்களுக்கு காணி உரிமங்களை வழங்குவதில் ஏதேனும் தடைகள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்து, இம் மக்கள் தொடர்ந்து 23 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற மேற்படி காணிகளின் உரிமங்களை இம் மக்கள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அப்பழுக்கற்ற தூய்மையான அரசியலையே நாம் மக்களுக்காக செய்துவருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில்...
சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அம...