தவறான தீர்மானங்கள் எமது மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கப் போவதில்லை – அமைச்சர் டக்ளஸ்!
Monday, January 17th, 2022
தவறான தீர்மானங்களினால் எமது மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மக்களின் பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
கட்டைக்காடு, முள்ளியான் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில், கட்டைக்காடு கிராமத்திற்கும் வெற்றிலைக்கேணி, இயக்கச்சி, சுண்டிக்குளம் ஆகிய இடங்களுக்கான இணைப்பு வீதிகள் புனரமைக்கப்படாமையினால் சரியான விலைக்கு கடலுணவுகளை விற்பனை செய்ய முடியாமல் இருப்பதாக பிரதேச கடற்றொழிலாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று, வன ஜீவராசிகள் திணைக்ளத்தினரின் செயற்பாடுகள், முள்ளியான் மருத்துவ நிலையத்திற்கான சுற்று மதில் மற்றும் நீர்த்தாங்கி ஆகியவற்றை புனரமைத்தல், இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், எமது மக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
000
Related posts:
|
|
|


