தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் அரசு கொண்டிருக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மை நிலை மாறவேண்டும் – டக்ளஸ் எம்.பி!
Wednesday, February 21st, 2018
வடக்கு மகாணத்தைப் பொறுத்தவரையில் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையையே இன்னமும் மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான கட்டளை 203ஆம் அத்தியாயம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில் –
வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையினை செயற்படுத்துவதற்கு நிதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு அதனை செயற்படுத்துவதற்கான நிதியை தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் கோரப்படுவதாகவும் வட மாகாண உள்ளூர் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிக் கட்டணம் 3 ஆயிரம் ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபா வரையில் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
பின்னர் 7 ஆயிரத்து 500 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ள போதிலும் இதனை 5 ஆயிரம் ரூபாவாகக் குறைக்குமாறே தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரி வருகின்றனர்.
அதேபோன்று மாதாந்த லொக்சீற் கட்டணம் 200 ரூபாவிலிருந்து 1000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டு பின்னர் 750 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை 500 ரூபா வரை குறைக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோன்று பழைய பேருந்தினை விற்றுவிட்டு புதிய பேருந்து வாங்குவோருக்கான பதிவுக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக வடக்கிற்கு மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
எனவே இத்தகைய நிலைமைகள் உடனடியாக மாற்றப்பட்டு தென்னிலங்கையில் என்ன நியதியோ அதே நியதியை வடக்கிலும் நிலைநாட்டுவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


