இந்திய வெளிவிவகார அமைச்சர் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சந்திப்பு – வடக்கின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பிலும் விசேட அவதானம்!

Monday, March 28th, 2022

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது – பருத்தித்துறை மற்றும் பால்சேனை உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கனவே இந்தியா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் விரிவாக ஆராய்ந்தனர்.

குறிப்பாக, இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இதன்போது, இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கச்சதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு தொடர்பாக எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலும் பயனுள்ளதாக அமைந்திருந்தமையை சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பேச்சுவார்த்தைகளை வினைத்திறனாக தொடர்ந்தும் மேற்கொள்வதன் ஊடாக, குறித்த விவகாரத்திற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை அடைய முடியுமென இரண்டு நாடுகளின் அமைச்சர்களும் நம்பிக்கை வெளியிட்டனர்.

அத்துடன் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான சுமார் 23 திட்டங்களைகளை  இந்திய வெளியுறவு அமைச்சரிடம் முன்வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலதிக திட்டங்கள் தொடர்பான எதிர்பார்ப்புக்களையும் வெளியிட்டார்.

அதனடிப்படையில் –

* வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு கடன் திட்டத்தின் அடிப்படையில் 100 மில்லியன் பெறுமதியான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள்.

* காங்கேசன் துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து.

* காங்கேசன்துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பண்டிச்சேரி இடையிலான பயணிகள் படகு சேவை.

* பலாலி – திருச்சி இடையிலான விமானப் போக்குவரத்து சேவை.

* காரைநகரில் அமைந்துள்ள சீநோர் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளுதல். அதேவேளை, அரசியல் தீர்வு விடயத்தில், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாணசபை முறைமையை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைய முடியும் என்று, கடந்த 30 வருடங்களுக்கும் அதிகமாக தான் வலியுத்தி வருகின்ற நிலைப்பாட்டிற்கு, காலம் கடந்தாயினும் ஏனைய தமிழர் தரப்புக்கள் வந்திருப்பதை வரவேற்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணி விடுவிப்பு – அரசியல் கைதிகள் விவகாரம் – காணாமல் போன உறவுகளுக்கான பரிகாரம் – அபிவிருத்தி போன்றவை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட்ட சக அமைச்சர்கள் அகியோருடன் கலந்துரையாடி, தன்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தமிழ் தலைவர்கள் விட்ட தவறுகளே எமது மக்களது இன்றைய நிலைமைகளுக்கு காரணம் - டக்ளஸ் தேவானந்தா!
இளைஞர் யுவதிகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அடித்தளத்தை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் – டக்ளஸ...
இதுபோன்று பல அறிவிப்புகள் வந்து போயுள்ளது - பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்திய மீனவர்களின் அ...